கோனியம்மன் கோவில் தேரோட்டம்; கோவையில் போக்குவரத்து மாற்றம்


தேரோட்டத்தையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி நடைபெற்ற போது எடுத்தபடம்.
x
தேரோட்டத்தையொட்டி தேரை அலங்கரிக்கும் பணி நடைபெற்ற போது எடுத்தபடம்.
தினத்தந்தி 4 March 2020 2:46 PM IST (Updated: 4 March 2020 2:46 PM IST)
t-max-icont-min-icon

கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கோனியம்மன் கோவில்
கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி முகூர்த்தக் கால் நடுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூஜைகள் நடந்தன. ஒவ்வொரு வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி யாக குண்டம் அமைத்து சிறப்பு வழிபாடு மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தேரை அலங்கரிக்கும் பணியும் நடைபெற்றது.

இன்று தேரோட்டம்
நேற்று மாலையில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இன்று (புதன்கிழமை) காலை சிறப்பு பூஜைகள், மதியம் 2 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.

கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடலில் இருந்து தேர் புறப்ப டும். இந்த தேர், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி உள்பட பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர்நிலை திடலை வந்தடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

போக்குவரத்து மாற்றம்
தேரோட்டத்தையொட்டி இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோனியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி கோவை பாலக்காடு சாலை மற்றும் பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சுங்கம் பைபாஸ் சாலை, ரெயில்வே மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.

அவினாசி சாலை, திருச்சி சாலையில் இருந்து வைசியாள் வீதி வழியாக பேரூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் டவுன்ஹால், உக்கடம் சென்று பேரூர் பைபாஸ் சாலை வழியாக சிவாலயா சந்திப்பை அடைந்து பேரூர் செல்ல வேண்டும்.

முழு ஒத்துழைப்பு
பேரூரில் இருந்து செட்டிவீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் சலீவன் வீதி வழியாக காந்திபார்க்கை அடைந்து நகருக்குள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, வைசியாள் வீதி, கே.ஜி.வீதி ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை எந்த வாகனங் களையும் நிறுத்த அனுமதி இல்லை.இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கோனியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் தலைமையில், துணை கமிஷனர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story