பாளையங்கோட்டையில் பெண்களுக்கான கபடி போட்டி: ஒட்டன்சத்திரம் அணிக்கு முதல் பரிசு


பெண்களுக்கான கபடி போட்டியில் முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் அணிக்கு  பரிசுக்கோப்பை வழங்கியபோது எடுத்த படம்.
x
பெண்களுக்கான கபடி போட்டியில் முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கியபோது எடுத்த படம்.
தினத்தந்தி 4 March 2020 4:59 PM IST (Updated: 4 March 2020 4:59 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் நடைபெற்ற பெண்களுக்கான கபடி போட்டியில் ஒட்டன்சத்திரம் அணி முதல் பரிசு கோப்பை பெற்றது.

கபடி போட்டி
நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 27-ந் தேதி முதல் மின்னொளி கபடி போட்டி நடந்தது. முதலில் ஆண்களுக்கான போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் பெண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஒட்டன்சத்திரம் சண்முகம் மெமோரியல் அணியும், பொள்ளாச்சி சாம்ராட் அணியும் விளையாடின. இதில் ஒட்டன்சத்திரம் அணி 5 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. பொள்ளாச்சி அணி 2-வது இடத்தை பிடித்தது. 3-வது இடத்தை திருவள்ளூர், வேலூர் அணிகள் பெற்றன.

பரிசளிப்பு விழா
போட்டி முடிந்ததும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா தலைமை தாங்கி, முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் அணிக்கு ரூ.50 ஆயிரத்து 72 மற்றும் பரிசு கோப்பையை வழங்கினார். இதேபோல் பொள்ளாச்சி அணிக்கு ரூ.30 ஆயிரத்து 72 மற்றும் கோப்பையும், 3-வது இடங்களை பிடித்த திருவள்ளூர், வேலூர் அணிகளுக்கும், பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.

விழாவில் போட்டி ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.எம்.சிவகுமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வைர மோதிரம்
இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய பொள்ளாச்சி அணி வீராங்கனை சந்தியாவுக்கு, அ.தி.மு.க. மருத்துவ அணி துணை செயலாளர் அபரூபா சுகந்தினி, தனது கையில் கிடந்த வைர மோதிரத்தை பரிசாக வழங்கினார். விழாவில் கபடி போட்டியை ஆரம்பம் முதல் கடைசி நாள் வரை வந்து பார்த்து சென்ற மூதாட்டி சொர்ணத்தம்மாளுக்கு சிறந்த பார்வையாளர் என்ற கபடி மூதாட்டி என்ற பட்டத்தை வழங்கி ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

Next Story