கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து வாங்க நோயாளிகள் கடும் அவதி


கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மருந்து வாங்க நோயாளிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 5 March 2020 5:00 AM IST (Updated: 4 March 2020 5:46 PM IST)
t-max-icont-min-icon

மருந்து மாத்திரைகளை வாங்க நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டி இருப்பதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கணினி சர்வர் பழுதடைந்ததால், மருந்து மாத்திரைகளை வாங்க நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டி இருப்பதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கணினி சர்வர் பழுது 

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு அனைத்து பிரிவுகளும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது.

இங்கு வெளிநோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவு எண் கொண்ட அட்டையின் மூலம் டாக்டர்களை நேரடியாக சந்தித்து சிகிச்சை பெற்ற பின்னர் மருந்தகத்தில் மருந்து மாத்திரைகளை வாங்கி செல்வது வழக்கம். ஒவ்வொரு நோயாளிக்கும் அளிக்கப்படும் சிகிச்சைகள், தடுப்பூசிகள், மருந்து மாத்திரைகள் போன்றவை ஆன்–லைனில் பதிவேற்றம் செய்யப்படுவதால், டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு பணி எளிதாக இருந்தது.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் உள்ள கணினி சர்வர் கடந்த சில நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு சிகிச்சைக்கு செல்லும் ஒவ்வொரு நோயாளிக்கும் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள், தடுப்பூசிகள், மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை நோட்டுப்புத்தகங்களில் டாக்டர்கள் எழுதி வழங்குகின்றனர்.

நோயாளிகள் கடும் அவதி 

மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருந்தகத்தில் பணியாற்றும் 4 மருந்தாளுனர்களில் 2 பேரை காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றுப்பணிக்கு அனுப்பி உள்ளனர். இதனால் வெளிநோயாளிகள் பிரிவில் 4 கவுண்டர்களுக்கு பதிலாக 2 கவுண்டர்களிலேயே நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அங்கு நோயாளிகள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து கிடந்து, மருந்து மாத்திரைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

செயல்படாத ஸ்கேன் மையம் 

மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஸ்கேன் மையத்திலும் பெரும்பாலான நேரத்தில் டாக்டர் பணியில் இல்லை என்று கூறுகின்றனர். பெரும்பாலும் அந்த மையம் செயல்படுவதில்லை. இதனால் வெளியில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் அதிக கட்டணம் செலுத்தி, நோயாளிகள் ஸ்கேன் எடுத்து செல்கின்றனர். எனவே கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் பழுதடைந்த கணினி சர்வரை உடனே சரி செய்ய வேண்டும். மருந்தாளுனர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பாமல், போதிய டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story