முட்செடிகளால் காட்சி அளிக்கும் தென்காசி ரெயில் நிலைய முகப்பு பகுதி புதுப்பொலிவு பெறுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
முட்செடிகளால் காட்சி அளிக்கும் தென்காசி ரெயில் நிலைய முகப்பு பகுதி புதுப்பொலிவு பெறுமா? என்று பயணிகள் எதிர்பார்த்துக் உள்ளனர்.
தென்காசி,
முட்செடிகளால் காட்சி அளிக்கும் தென்காசி ரெயில் நிலைய முகப்பு பகுதி புதுப்பொலிவு பெறுமா? என்று பயணிகள் எதிர்பார்த்துக் உள்ளனர்.
தென்காசி நகரம்
தென்றல் தவழும் தென்காசி நகரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. தற்போது இந்த நகரம் மாவட்ட தலைநகர் அந்தஸ்தை பெற்றுள்ளது. அருகில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம் இருப்பதால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தென்காசிக்கு வந்து குற்றாலத்திற்கு செல்கிறார்கள்.
தென்காசி வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் ரெயில்கள் மூலமாக வருகிறார்கள். தென்காசி ரெயில் நிலையம் சந்திப்பு நிலையமாக உள்ளது. இங்கு தினமும் செங்கோட்டை–சென்னை, செங்கோட்டை–மதுரை, செங்கோட்டை–நெல்லை, நெல்லை–பாலக்காடு, சென்னை–கொல்லம் ஆகிய ரெயில்கள் தினமும் வந்து செல்கின்றன.
மேலும் செவ்வாய், வியாழன், ஞாயிறுக்கிழமைகளில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் வந்து செல்கிறது. இதுதவிர வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்துக்கு திங்கட்கிழமையும், எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சனிக்கிழமையும் ரெயில் செல்கிறது.
டிக்கெட் கவுண்டர்
விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் போன்ற காலங்களில் ஏராளமான பயணிகள் இந்த ரெயில்களில் வருகிறார்கள். இந்த ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் முட்செடிகள் சூழ்ந்து இருக்கின்றன. இவை நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளன. இதன் அருகில் கழிவுநீர் தொட்டி (செப்டிக் டேங்க்) நிரம்பி வழிகிறது. நீண்ட நாட்களாக இதுவும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இரவு நேரங்களில் இந்த பகுதியில் மின் விளக்குகளும் போதிய அளவு இல்லை. முட்செடிகள் நிறைந்திருப்பதால் விஷ ஜந்துக்கள் உள்ளன. இரவு நேரங்களில் பயணிகள் இந்த வழியாக அச்சத்துடனே வருகிறார்கள்.
டிக்கெட் வழங்கும் கவுண்டர்களில் சில மாதங்களுக்கு முன்பு முன்பதிவு கவுண்டர் அடைக்கப்பட்டு விட்டது. வழக்கமாக டிக்கெட் கொடுக்கும் கவுண்டர்களிலேயே முன்பதிவு செய்யப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு காலதாமதம் ஆகிறது. தற்போது தென்காசி ரெயில் நிலையத்தில் ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டுமே உள்ளது. மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளதால் மேம்பாலத்தின் வடபகுதியில் இருந்து ரெயில் நிலையத்துக்கு வருபவர்கள் மேம்பாலத்தை சுற்றி முகப்பில் நுழைய வேண்டி உள்ளது. எனவே ரெயில் நிலையத்தின் வடபகுதியில் ஒரு வாசல் அமைக்கப்பட்டு கவுண்டரும் அமைக்கவேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
புதுபொலிவு
இதுகுறித்து ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் என்.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:–
வளர்ந்து வரும் தென்காசி நகரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை இருந்து வரும் சூழலில் ரெயில் நிலையத்தில் இவ்வளவு குறைபாடுகள் இருப்பது ரெயில்வே நிர்வாகத்தின் மெத்தன போக்கே ஆகும். கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இங்கு குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. எனவே இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். மேலும் தென்காசியில் இருந்து கோவை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ரெயில்கள் இல்லை. அந்த ரெயில்களையும் இயக்க பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்காசி ரெயில் நிலைய குறைபாடுகளை களைந்து புதுப்பொலிவு பெற வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.
Related Tags :
Next Story