திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: பறவை காவடி எடுத்து வழிபட்ட பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து வழிபட்டனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து வழிபட்டனர்.
மாசித் திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 28–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி–அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
6–ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், தெய்வானை அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாத யாத்திரை பக்தர்கள்
மாசித் திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள், பச்சை மற்றும் காவி நிற ஆடை அணிந்து, பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான பக்தர்கள் பல்வேறு அடி நீள அலகு குத்தியும், புஷ்ப காவடி, சூரிய காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்தும், பால்குடம் எடுத்தும் பாத யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.
கோவில் வளாகம், மண்டபங்கள், விடுதிகளில் பக்தர்கள் தங்கியிருந்து, பல்வேறு குழுக்களாக அமர்ந்து முருக பெருமானின் திருப்புகழை பாடி வழிபடுகின்றனர். அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.
இன்று, சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா
7–ம் நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு சுவாமி சண்முகர்–வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி–அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும்.
பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர்–வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகிளிலும் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
நாளை, சுவாமி பச்சை சாத்தி...
8–ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளுடை அணிந்து, வெண்ணிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். மதியம் சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து, பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
8–ந்தேதி, தேரோட்டம்
9–ம் நாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவில் தேர் கடாட்சம் நடைபெறும். 10–ம் நாளான வருகிற 8–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 11–ம் நாளான 9–ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
12–ம் நாளான 10–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் சுவாமி–அம்பாள் மஞ்சள் நீராட்டு கோலத்துடன் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றம் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story