அந்தியூர் தவுட்டுப்பாளையம் அழகு முத்துமாரியம்மன் கோவில் குண்டம் விழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்


அந்தியூர் தவுட்டுப்பாளையம்   அழகு முத்துமாரியம்மன் கோவில் குண்டம் விழா   ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
x
தினத்தந்தி 5 March 2020 4:30 AM IST (Updated: 4 March 2020 9:01 PM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் தவுட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன் கோவில் குண்டம் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

அந்தியூர்,

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் பழமையானதும் புகழ் பெற்றதுமான அழகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அவற்றை தொடர்ந்து கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்திற்கு மஞ்சள் பூசி புனித நீர் ஊற்றி வேப்பிலை வைத்து பெண்கள் வழிபட்டு வந்தனர்.

அதேபோல இளைஞர்கள் இரவு நேரங்களில் கம்பத்தை சுற்றி ஆட்டம் ஆடி வந்தனர். திருவிழாவை முன்னிட்டு தினமும் மாலை 6 மணிக்கு அழகு முத்து மாரியம்மன் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு பல்வேறு வாகனங்களில் வைத்து வீதிஉலா நடைபெற்றது.

அம்மை அழைத்தல்

நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த விறகை கொண்டு 50 அடி நீளத்திற்கு குண்டம் தயார் செய்யப்பட்டது. நேற்று முக்கிய நிகழ்வான குண்டம் விழா நடைபெற்றது. இதையொட்டி மதியம் 12 மணி அளவில் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு வசதியாக சமன் செய்யப்பட்டது. பின்னர் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி அழகு முத்து மாரியம்மன் கோவில் அருகே இருந்து குதிரைக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு மாலைகள் அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.

குண்டம் இறங்கினர்

அவற்றை தொடர்ந்து அழகு முத்து மாரியம்மன் உற்சவர் சிலை தேரில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு வந்தனர். தேருக்கு பின்னால் ஆயிரக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். கோவிலை 3 முறை சுற்றி வந்து கோவில் முன்பு மாவிளக்கு வைத்து பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து குண்டம் இறங்குவதற்கு வாக்கு கேட்கப்பட்டது. வாக்கு கிடைத்தவுடன் முதலில் பூசாரி அக்னி அபிஷேகங்கள் செய்து குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். பின்னர் வெள்ளை நிற மற்றும் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்த சிறுவர், சிறுமிகள் என ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரம்பில் அரளிப்பூவை சுற்றிக் கொண்டு கையில் வைத்துக்கொண்டு பயபக்தியுடன் குண்டம் இறங்கினர்.

நேர்த்திக்கடன்

ஒரு சிலர் தங்கள் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கரகோஷம் எழுப்பி, “அம்மா தாயே எங்களை காப்பாற்று” என கோஷங்களை எழுப்பியும் வேண்டியும் உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து பெண்கள் கோவிலை சுற்றி பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணி அளவில் கம்பம் பிடுங்கப்படுகிறது. பின்னர் கம்பத்தை தோள் மீது சுமந்து கொண்டு் ஊர்வலமாக சென்று பொது கிணற்றில் விடப்படுகிறது. மேலும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. திருவிழாவில் அந்தியூர், தவுட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், சந்தியபாளையம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story