கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க காய்ச்சல், தொண்டைவலி, இருமல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் - கலெக்டர் அறிவுரை


கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க காய்ச்சல், தொண்டைவலி, இருமல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் - கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 5 March 2020 3:15 AM IST (Updated: 5 March 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காய்ச்சல், தொண்டைவலி, இருமல் இருந்தால் உடனடியாக பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர்,

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா நோய் பாதிப்பு இல்லையென்றாலும், தொற்று பரவாமல் இருக்க அரசு விழிப்புடன் இருந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நோய் பாதித்தவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு, தொண்டை வலி, சளி, உடல் சோர்வு இருக்கலாம். ஒரு சிலருக்கு மூச்சுதிணறல் ஏற்படும். இதுவே கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாகும்.

மேற்கண்ட அறிகுறி கண்ட நபர்கள் இருமும்போதும், தும்மும் போதும் வாயிலிருந்து வெளிப்படும் எச்சில் மூலமாக அருகிலுள்ள நபருக்கு நேரடியாக நோய் பரவுகிறது. இந்நோய் கிருமி, காற்றில் இருப்பதில்லை. ஆனால், மனிதன் பயன்படுத்துகின்ற எல்லா பொருட்களிலும் தங்கும். மனிதனின் கைகளிலும் இருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே நோய் பாதித்த நபர்கள் முகமூடி (மாஸ்க்) அணிய வேண்டும். நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகமூடி அணிய வேண்டும். கூட்டமாக உள்ள இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும்போது முகமூடி அணியலாம். தரையில் நோய் கிருமி 12 மணி நேரம் வரை உயிருடன் இருக்க வாய்ப்புள்ளது. எனவே கைகளையும், நாம் பயன்படுத்தும் பொருட்களையும் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

வீடு மற்றும் தொழில் வளாகங்கள், அலுவலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், குறிப்பாக மருத்துவமனைகளின் தரைகளை அடிக்கடி ‘சோடியம் ஹைபோ குளோரைடு’ அல்லது ‘லைசால்’ போன்ற தொற்று நீக்க திரவத்தால் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு சுத்தமாக விரல் இடுக்குகளில் தேய்த்து கழுவ வேண்டும். இதனை வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு பெரியவர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

யாருக்கேனும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் கண்டால் அவரை தனியே அமர செய்து, இருமும்போதும், தும்மும்போதும் வாயை துணியால் அல்லது கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற்று உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தல் வேண்டும். அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் தக்க விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

பெண்கள் சமைக்கும் முன்னரும், பரிமாறும் முன்னரும், கழிவறை உபயோகித்த பின்னரும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். குடிக்கும் தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து தான் பருக வேண்டும். சூடான உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டும். பழைய உணவுகளை உண்ணுவதை தவிர்க்க வேண்டும். துணிமணிகளை அன்றாடம் சுத்தமாக துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். குளிர்பானங்களை குளிர்ந்த நிலையில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

சீனா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு பயணம் செய்து திரும்பியவர்களை தனிமைப்படுத்த வேண்டும். நோய் அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை வலி, இருமல் ஆகியவை இருந்தால் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது நமது மாவட்ட தட்ப வெப்ப நிலையில் நோய் பாதிக்க வாய்ப்பில்லை. தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால், மிகுந்த விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து அதற்கு தகுந்தாற்போல் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story