வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை ; வியாபாரிகள் மனு
கறிக்கோழிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்,
தமிழ்நாடு கறிக்கோழி மொத்த வியாபாரிகள் சங்க குமரி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் அருளப்பன், பொருளாளர் ரமேஷ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் டேவிட்சன் மற்றும் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சமீப காலமாக சில நபர்கள் சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப்-, முகநூல், யூடியூப்பில் தமிழகத்தில் கறிக்கோழிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் கறிக்கோழி உண்பதை தவிர்க்குமாறு பதிவுகளை இட்டு பொதுமக்கள் இடையே அச்சத்தையும், பயத்தையும், குழப்பத்தையும் உருவாக்கி உள்ளது.
மேலும் கறிக்கோழி விற்பனையில் சரிவை காணச் செய்து உற்பத்தியாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே இதுபோன்று வதந்திகளை பரப்பி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story