நாமக்கல்லில், இன்று ரூ.338¾ கோடியில் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவிழா முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்


நாமக்கல்லில், இன்று ரூ.338¾ கோடியில் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவிழா முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 5 March 2020 5:45 AM IST (Updated: 5 March 2020 3:13 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் இன்று ரூ.338¾ கோடியில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

நாமக்கல்,

நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ரூ.338 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

இந்த விழாவுக்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி அஸ்வினிகுமார் சவுபே, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன், சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

முன்னதாக சேந்தமங்கலத்தில் உயர்கல்வித் துறை சார்பில் ரூ.7 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

ரூ.134 கோடி நலத்திட்ட உதவிகள்

மேலும் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் ரூ.1,167 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.34 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 9 புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைத்து, 33,141 பயனாளிகளுக்கு ரூ.134 கோடியே 37 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார்.

புதிய மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா நடைபெற உள்ள மைதானத்தில் பொதுமக்கள், பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் மூலிகை செடி வகைகள், சித்த மருத்துவம், குடும்ப நலம், நோய் தடுப்பு மருந்துதுறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் விளக்க கண்காட்சி நடத்தப்பட உள்ளன.

இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசுகிறார். விழா முடிவில் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நன்றி கூறுகிறார்.

Next Story