இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த மடாதிபதி முருடேஸ்வரில் கைது
கோலார் அருகே, இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த மடாதிபதி முருடேஸ்வரில் கைது செய்யப்பட்டார். அவர் இளம்பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு,
கோலார் தாலுகாவில் உள்ளது கூலளி கிராமம். இந்த கிராமத்தில் பீமலிங்கேஸ்வரா கோவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த கோவிலுக்கு வந்த மடாதிபதி ஒருவர் கிராம மக்களிடம் தனது பெயர் ராகவேந்திரா என்கிற தத்தாத்ரேயா என்று அறிமுகம் செய்து கொண்டார்.
பின்னர் பீமலிங்கேஸ்வரா கோவிலில் நான் செய்ய வேண்டிய சேவை ஏராளமாக உள்ளது. இந்த கோவிலை வளர்ச்சி அடைய வைக்க இங்கு தங்க உள்ளேன் என்று கூறினார். இதற்கு கிராம மக்கள் ஒப்பு கொண்டனர். இதையடுத்து கோவில் அருகே சிறியதாக குடிசை அமைத்து அந்த மடாதிபதி தங்கி இருந்தார். இந்த நிலையில் பீமலிங்கேஸ்வரா கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த கூலளி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், மடாதிபதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் மடாதிபதியை அவர் வசித்த குடிசைக்கு சென்று அந்த இளம்பெண் அடிக்கடி சந்தித்து வந்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம்(பிப்ரவரி) 15-ந் தேதி பீமலிங்கேஸ்வரா கோவிலில், மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள வந்த இளம்பெண் அதன்பின்னர் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை. அதேபோல மகாசிவராத்திரி விழா முடிந்த நாள் முதல் மடாதிபதியும் மாயமாகி விட்டார். இதனால் அந்த இளம்பெண்ணும், மடாதிபதியும் ஓட்டம் பிடித்து விட்டதாக கிராம மக்கள் பேசிக் கொண்டனர். இந்த சம்பவம் கூலளி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் கோலார் புறநகர் போலீசில் ஒரு புகார் அளித்தனர். அந்த புகாரில் மடாதிபதி ராகவேந்திரா தான், எங்களது மகளை கடத்தி சென்று விட்டார். அவரிடம் இருந்து எங்கள் மகளை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மடாதிபதியையும், இளம்பெண்ணையும் தேடிவந்தனர். இ்தற்கிடையே மடாதிபதியும், இளம்பெண்ணும் திருப்பதிக்கு சென்று திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து திருப்பதிக்கு சென்று கோலார் புறநகர் போலீசார் மடாதிபதியையும், இளம்பெண்ணையும் தேடினார்கள். ஆனால் அவர்கள் அங்கு கிடைக்கவில்லை. இதன்பின்னர் மடாதிபதியையும், இளம்பெண்ணையும் கண்டுபிடிக்க சிருங்கேரி, மங்களூரு, விஜயாப்புரா ஆகிய பகுதிகளுக்கு சென்று தேடினார்கள். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மடாதிபதியும், இளம்பெண்ணும் கார்வார் மாவட்டம் முருடேஸ்வரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருப்பதாக கோலார் புறநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், தனியார் தங்கும் விடுதியில் விசாரித்தனர்.
அப்போது மடாதிபதியும், இளம்பெண்ணும் அங்கு தங்கியிருந்தது தெரிந்தது. இதையடுத்து முருடேஸ்வர் கடற்கரையில் இளம்பெண்ணுடன் கொஞ்சி விளையாடி கொண்டு இருந்த மடாதிபதியை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த இளம்பெண்ணையும் மீட்டனர். போலீசார் கைது செய்த போது மடாதிபதி சிகை அலங்காரத்தை மாற்றியும், முகச்சவரம் செய்தும் வாலிபர் போல காட்சி அளித்தார்.
இதனை தொடர்ந்து பிடிபட்ட மடாதிபதியையும், இளம்பெண்ணையும் போலீசார் கோலாருக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததும் அம்பலமானது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story