மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா
பா.ஜனதா உறுப்பினர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மேல்-சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,
கர்நாடக மேல்-சபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், எச்.எஸ்.துரைசாமி குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக பா.ஜனதா உறுப்பினர் ரவிக்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் மேலவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு பா.ஜனதா உறுப்பினர்களும் கோஷமிட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
அப்போது மேலவை தலைவர் பிரதாப்சந்திரஷெட்டி பேசும்போது, ரவிக்குமார் இதுபற்றி பேச வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது அவர் எழுந்து பேசும்போது, “சாவர்க்கர் ஒரு தேசபக்தர். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், நேரு ஆகியோருடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் அவர் பங்கேற்றார். மராட்டியத்தில் அவரது மூன்று சகோதரர்கள் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சுதந்திர போராட்டத்தில் சாவர்க்கரின் குடும்பமே கலந்து கொண்டது” என்றார்.
அப்போது தர்ணாவில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பட்டீல், “எச்.எஸ்.துரைசாமி குறித்து அவர் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் அவர் மற்ற விஷயங்கள் பற்றி பேசுகிறார். அது எங்களுக்கு தேவை இல்லை. அவர் ஒன்றும் தலைமை ஆசிரியர் இல்லை, நாங்கள் அவருக்கு மாணவர்கள் இல்லை” என்றார்.
அப்போது ஜனதா தளம்(எஸ்) குழு தலைவர் பசவராஜ் ஹொரட்டி, “சபையின் நேரம் ஏற்கனவே 2 நாட்கள் வீணாகிவிட்டது. கூறியதையே மீண்டும் மீண்டும் கூறுவதால் எந்த பயனும் இல்லை. ரவிக்குமார் வருத்தம் தெரிவித்தால் பிரச்சினை முடிவுக்கு வரும். அவர் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார் என்று தெரியவில்லை” என்றார். அதைத்தொடர்ந்து மீண்டும் பேசிய ரவிக்குமார், “சாவர்க்கர் ஒரு வீரர். அவர் ஒன்றும் கோழை அல்ல. எச்.எஸ்.துரைசாமி பற்றி கூறிய கருத்திற்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். எனது கருத்தில் உறுதியாக உள்ளேன்” என்றார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எஸ்.ஆர்.பட்டீல், “உங்களுக்கு இந்த சபை சுமுகமாக நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பெயருக்கு இந்த சபையை நடத்துகிறீர்கள். விதி 242-ன் கீழ் ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அதுகுறித்து ஒரு கடிதத்தை மேலவை தலைவரிடம் அவர் வழங்கினார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணாவை வாபஸ் பெற்று இருக்கைக்கு திரும்பினர்.
Related Tags :
Next Story