சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை - திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் பா.ஜனதாவினர் புகார்


சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை - திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் பா.ஜனதாவினர் புகார்
x
தினத்தந்தி 5 March 2020 4:15 AM IST (Updated: 5 March 2020 6:06 AM IST)
t-max-icont-min-icon

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் பா.ஜனதாவினர் புகார் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

பா.ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்வேல் ஆகியோர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமாரிடம் நேற்று மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றி தி.மு.க. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து உண்மைக்கு மாறான வதந்திகளை மக்களிடையே பரப்பி வருகிறார். இதனால் முஸ்லிம்கள் நாட்டை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும், முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், தாத்தா, பாட்டியின் பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்துள்ளார்.

மக்களின் பொது அமைதியை குலைத்து, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை அச்சமூட்டி அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மனதை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலமாக சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் தொடர்ந்து வேண்டுமென்றே பேசி வருகிறார். எனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடமும் மனு கொடுத்துள்ளனர்.

முன்னதாக பா.ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி பல்வேறு நிலைகளில் மக்களை சந்தித்து குடியுரிமை திருத்த சட்டத்தின் நன்மைகளை தெரிவித்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய குடிமகனுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று பிரதமர் பேசியிருக்கிறார். தமிழக முதல்-அமைச்சரும் அதை வழிமொழிந்துள்ளார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரத்தை பரப்பி வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது. பாதிப்பு இருப்பதாக சொல்லும் எதிர்க்கட்சிகள் அது குறித்து நிரூபிக்கவில்லை. வங்கதேசத்தை சேர்ந்த 6 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று இவர்கள் போராடுகிறார்களா? என்று சந்தேகிக்கத்தோன்றுகிறது.

தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை இல்லை. இதனால் இந்து-இஸ்லாமிய மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வை விதைத்து மதகலவரத்தை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார். பா.ஜனதா கட்சியின் சார்பில் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர வேண்டும் என்று காவல்துறையில் தெரிவிக்க இருக்கிறோம்.

அதனால் மு.க.ஸ்டாலின் நினைப்பது நடக்காது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்பவர்கள் பிரதமர், முதல்-அமைச்சரை மிகவும் தரக்குறைவாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசி வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை பா.ஜனதா கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தங்கராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். 

Next Story