ஸ்ரீபெரும்புதூரில் காமராஜரால் திறக்கப்பட்ட மணிக்கூண்டை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூரில் காமராஜர் திறந்து வைத்த மணி கூண்டு பராமரிப்பின்றி காணப்படுகிறது. அதை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணிக்கூண்டு
ஸ்ரீபெரும்புதூரில் திருவள்ளூர் செல்லும் சாலை, சென்னைக்கு செல்லும் சாலை, பெங்களூருக்கு செல்லும் சாலை சந்திக்கும்பகுதியில் பஸ் நிலையம் அருகில் மணிக்கூண்டு உள்ளது.
இந்த மணிக்்கூண்டை கடந்த 1955-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் திறந்து வைத்தார். இந்த பகுதி வியாபாரிகள் இந்த மணிக்கூண்டில் நேரத்தை பார்த்து வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியின் பராமரிப்பு இல்லாமல் இதில் இருந்த கடிகாரம் பழுதாகி போனது. பல ஆண்டுகளாக இந்த கடிகாரம் செயல்படாமல், மணிக்கூண்டும் சிதிலம் அடைந்து காட்சியளித்தது.
கடிகாரம் பழுதானது
இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள பிரபல கார் தயாரிக்கும் தொற்சாலை மூலம் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு புது பொலிவுடன் மணிக்கூண்டு பொதுமக்களுக்கு காட்சியளித்தது.
சில நாட்களுக்கு பின் கடிகாரம் பழுதாகி நின்றது. பேரூராட்சி நிர்வாகம் இந்த மணிக்கூண்டை கண்டுகொள்ளவில்லை.
கோரிக்கை
இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் ஆயிரம் ஆண்டு அவதார விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பழைய கடிகாரத்தை மூடிவிட்டு புதியதாக டிஜிட்டல் கடிகாரம் பொருத்தப்பட்டது.
இதுவும் சில மாதங்களில் பழுதாகி நேரத்தை காட்டவில்லை. தற்போது வெறும் காட்சி பொருளாகவே மணிக்கூண்டு உள்ளது. காமராஜர் திறந்து வைத்த மணிக்கூண்டை முறையாக பராமரித்து செயல்படுத்த வேண்டும் என்பதே வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story