திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 25,486 பேர் எழுதினர்


திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 25,486 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 5 March 2020 7:30 AM GMT (Updated: 5 March 2020 7:21 AM GMT)

பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 25,486 பேர் எழுதினார்கள்.

திருப்பூர், 

பிளஸ்-1 தேர்வு பொதுத்தேர்வாக அறிவிக்கப்பட்டதில் இருந்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்வாக மாணவர்கள் கருதத்தொடங்கி விட்டனர். இதனால் இந்த தேர்வுக்கும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படிக்க தொடங்கினர். இந்த தேர்வில் தோல்வி அடைந்தாலும் பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம். ஆனால் கல்லூரியில் சேர பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பதால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வை எழுத வந்திருந்தனர்.

தேர்வு எழுத பள்ளிக்கு புறப்பட்ட மாணவ-மாணவிகள் வீடுகளில் தங்கள் பெற்றோரிடம் ஆசிபெற்று, பின் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி விட்டு பள்ளியை சென்றடைந்தனர். பள்ளியில் தங்கள் வரிசை எண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை எண் விவரத்தை தெரிந்து கொண்டு பள்ளி வளாகத்தில் அமர்ந்தனர். பின்னர் தங்கள் வகுப்பு தோழிகளுடன் அமர்ந்து முக்கிய வினாக்களுக்கான விடைகளை ஒரு முறை படித்து பார்த்துக்கொண்டனர். அதே சமயம் ஒரு சில மாணவிகள் அவசர, அவசரமாக தேர்வு மையத்துக்கு ஓடி வந் தனர். அனைத்து பள்ளிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வுக்கு செல்வதற்கு முன் பென்சிலை கூர்மைப்படுத்தி வைத்துக்கொள்ளுதல், பேனாவுக்கு மை ஊற்றுதல், போன்றவற்றை செய்து வைத்தனர். பாடத்தை படிக்கும் மாணவிக்கு தேர்வு மைய வளாகத்தில் சக மாணவிகள் உணவு ஊட்டி விட்டனர். மேலும் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று மாணவிகளில் நெற்றியில் தாயார் திலகமிட்டும் தேர்வு மையத்திற்குஅனுப்பி வைத்தனர்.

பிளஸ-1 மாணவர்களுக்கு தமிழ் பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கு திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், தனிதேர்வர்கள் என்று மொத்தம் 26,957 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 25,486 பேர் எழுதினார்கள். 1,471 பேர் எழுத வரவில்லை. பறக்கும் படையினர் பல்வேறு தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு செய்தனர். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் சிலர் ஆசிரியர் உதவியுடனும் தேர்வை எழுதினார்கள்.

கே.எஸ்.சி.அரசு மேல்நிலைப்பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி, பிஷப் உபகாரசாமி பள்ளி, குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கிட்ஸ் கிளப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ்ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறும் போது, திருப்பூர் மாவட்டத்தில் எந்த வித ஒழுங்கீன செயல்களும் இல்லாமல் தேர்வு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது என்றார்.

Next Story