இஸ்ரோவில் 20 ஆண்டுகளாக தினக்கூலியாக பணியாற்றுபவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்; ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்
இஸ்ரோவில் 20 ஆண்டுகளாக தினக்கூலியாக பணியாற்றுபவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஞானதிரவியம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோவில் ஐ.பி.ஆர்.சி.-ல் வேலையாட்களை நியமிப்பதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
பாதுகாப்பற்ற ஆபத்தான திரவங்களை கையாளும் மகேந்திரகிரியில் மிகக்குறைந்த அளவிலான பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளனர். எனவே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது போல் உரிய பாதுகாப்பு துறை அதிகாரிகளை மகேந்திரகிரி இஸ்ரோவில் நியமித்து, பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டும்.
நிரந்தர பணியாளர்கள்
மத்திய, மாநில அரசுகளின் விதிகளின்படி கடைநிலை ஊழியர்களின் 69 சதவீதம் நபர்களை இதுபோன்ற மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தான் நியமிக்க வேண்டும் என்பது நடைமுறையாகும். இஸ்ரோ ஐ.பி.ஆர்.சி. அமைக்கும்போது சுற்றுவட்டார மக்களுக்கு வேலை வழங்குவதாக உத்தரவாதம் அளித்தனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக எந்தவித நிரந்தர கடைநிலை ஊழியர்களை (சி மற்றும் டி நிலை) நியமிக்கவில்லை. இதில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாக வேலை பார்த்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைநிலை ஊழியர்களை நிரந்தரமாக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. எனவே 20 ஆண்டுகளாக தினக்கூலியாக வேலை பார்க்கும் ஊழியர்களை நிரந்தர பணியாளர்களாக எந்தவித தாமதம் இன்றி உடனடியாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story