பெரியகுளம் கடைவீதியில் குடிமகனால் போக்குவரத்து பாதிப்பு; சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ


பெரியகுளம் கடைவீதியில் சாலையில் தன்னிலை மறந்து படுத்த குடிமகனின் தள்ளாடிய காட்சிகளை படத்தில் காணலாம்.
x
பெரியகுளம் கடைவீதியில் சாலையில் தன்னிலை மறந்து படுத்த குடிமகனின் தள்ளாடிய காட்சிகளை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 5 March 2020 5:52 PM IST (Updated: 5 March 2020 5:52 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் கடைவீதியில் மது போதையில் தன்னிலை மறந்து சாலையில் படுத்து உருண்ட குடிமகனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிமகன்கள் அட்டகாசம்
மது போதையில் குடிமகன்கள் தன்னிலை மறந்து சாலையோரத்தில் பொதுமக்கள் முகம்சுளிக்கும் வகையில் படுத்துக்கிடப்பதும், தள்ளாடியபடி நடந்து மற்றவர்களுக்கு இடையூறு செய்வதும் பல்வேறு இடங்களில் வாடிக்கையாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலானது. அதில், குடிமகன் ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி வேகமாக வரும் அரசு பஸ்சை தடுத்து நிறுத்துவார். அந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர். இந்தநிலையில் அதுபோன்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மதுபோதையில் குடிமகன்கள் முக்கிய சாலைகளில் படுத்து குட்டிக்கரணம் அடித்து வரும் சம்பவம் அரங்கேறி வருகிறது. மேலும் அந்த குடிமகன்களின் அட்டகாச வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

போக்குவரத்து நெரிசல்
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை அருகே 2 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான நபர்கள் வந்து மது குடித்து செல்கின்றனர். அவர்களில் சிலர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து விட்டு பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெரியகுளம் வடகரையில் நான்கு சாலைகள் சந்திக்கும் கடைவீதிக்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மதுபோதையில் தள்ளாடியபடி வந்தார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த பகுதியில் அந்த நபர், தான் அணிந்திருந்த கைலியை கழட்டி சாலையின் நடுவில் விரித்தார். சட்டையும், உள்ளாடையும் அணிந்த நிலையில், கைலியில் அவர் படுத்துக்கொண்டார்.

குண்டுக்கட்டாக...
எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த பகுதியில் திடீரென்று ஒருவர் சாலையில் படுத்ததால் பலரும் வேடிக்கை பார்த்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் அவரை கடந்து ஓரமாக சென்றனர். அவரால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 2 பேர், போதையில் கிடந்த நபரை குண்டுக்கட்டாக தூக்கி சாலையோரம் அமர வைத்தனர். ஆனால் அந்த நபர், மீண்டும் சாலைக்கு சென்று தான் ஏற்கனவே படுத்து இருந்த அதே இடத்தில் கைலியை விரித்து படுத்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மது போதையில் சாலையில் படுத்துகிடந்த நபரை எழுப்ப முயன்றனர். ஆனால், அவர் கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் எழுந்திருக்கவில்லை. பின்னர் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் அந்த குடிமகனை குண்டுக்கட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

கைது
அந்த நபர் போதையில் தன்னிலை மறந்த நிலையில் இருந்ததால், அவரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அந்த குடிமகன், பெரியகுளம் வடகரையை சேர்ந்த கூலித்தொழிலாளி மாயக்கண்ணன் (வயது 41) என்பது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளத்தில் சாலையில் படுத்து உருண்ட செயலை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று தினசரி குடிமகன்கள் அட்டகாசம் செய்வதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பெரியகுளத்தின் முக்கிய சாலையில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story