வழக்கை வாபஸ் பெற மறுத்த வைத்தியர் கொலை: 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


வழக்கை வாபஸ் பெற மறுத்த வைத்தியர் கொலை:  2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 March 2020 3:45 AM IST (Updated: 5 March 2020 8:12 PM IST)
t-max-icont-min-icon

வழக்கை வாபஸ் பெற மறுத்த வைத்தியரை கொன்ற 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

நெல்லை, 

வழக்கை வாபஸ் பெற மறுத்த வைத்தியரை கொன்ற 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

வைத்தியர் 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கருத்தையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜீவன்குமார் (வயது 53). இவர் கிராமங்களில் உள்ள மக்களுக்கு நோய்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். இவர் கடந்த 6–1–2015 அன்று தனது நண்பர் சக்தி என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற சங்கரபாண்டியபுரத்தை சேர்ந்த சுந்தர் (29), சின்னத்துரை (28) ஆகிய 2 பேரும் அவதூறாக பேசியபடி சென்றனர். உடனே ஜீவன்குமார், இப்படி ஏன் அவதூறாக பேசி செல்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது அவர்களுக்கும், ஜீவன்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அவர்கள் 2 பேரும் சேர்ந்து, ஜீவன்குமாரை அடித்து உதைத்து காயப்படுத்தினர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசில் அவர்கள் 2 பேர் மீதும் ஜீவன்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

கத்தியால் குத்திக்கொலை

இந்த நிலையில் ஜாமீனில் வந்த சுந்தர், சின்னத்துரை ஆகிய 2 பேரும், கடந்த 2–8–2015 அன்று ஜீவன்குமாரை சந்தித்து தங்கள் மீது உள்ள வழக்கை வாபஸ் பெறுமாறு கூறினார்கள். இதற்கு அவர் மறுத்தார். உடனே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து சுந்தர், சின்னத்துரை ஆகிய 2 பேரும் சேர்ந்து ஜீவன்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 6–8–2015 அன்று ஜீவன்குமார் பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை 

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர், சின்னத்துரை ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்கள் மீது நெல்லை 4–வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி விஜயகாந்த் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட சுந்தர், சின்னத்துரை ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு வக்கீலாக துரைமுத்துராஜ் ஆஜரானார்.

Next Story