கோவில் திருவிழா எதிரொலி: கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது
கோவில் திருவிழா எதிரொலியாக கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு 100 கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த கன்றுக்குட்டிகள் ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், நாமக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 300 பசு மாடுகளும், 150 எருமை மாடுகளும் என மொத்தம் 450 மாடுகள் விற்பனைக்கு வந்தன.
வரத்து குறைந்தது
இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.34 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.52 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.63 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும், கோவா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை பிடித்து வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.
இதுகுறித்து சந்தை மேலாளர் சங்கர் கூறும்போது, ‘தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் 525 மாடுகள் விற்பனைக்கு வந்தது. இந்த வாரம் 450 மாடுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டு இருந்தது. சந்தைக்கு கொண்டுவரப்பட்ட மாடுகளில் 85 சதவீத மாடுகள் விற்பனையானது’ என்றார்.
Related Tags :
Next Story