உடன்குடியில் கருப்புக்கட்டி தயாரிக்கும் நிறுவனங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு


உடன்குடியில் கருப்புக்கட்டி தயாரிக்கும் நிறுவனங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 6 March 2020 3:30 AM IST (Updated: 5 March 2020 9:52 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் கருப்புக்கட்டி தயாரிக்கும் நிறுவனங்களில் கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

உடன்குடி, 

உடன்குடியில் கருப்புக்கட்டி தயாரிக்கும் நிறுவனங்களில் கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கருப்புக்கட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் 

கருப்புக்கட்டிக்கு பெயர் பெற்ற உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான கருப்புக்கட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. தற்போது கோடைக்காலம் தொடங்கியதை முன்னிட்டு, பனை மரங்களில் இருந்து பெறப்படும் பதனீர் மூலம் கருப்புக்கட்டி உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உடன்குடி–செட்டியாபத்து ரோடு, திசையன்விளை ரோடு, கொட்டங்காடு ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கருப்புக்கட்டி தயாரிக்கும் நிறுவனங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கருப்புக்கட்டி, கற்கண்டு உற்பத்தி செய்யப்படும் இடங்கள், குடோன்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தரமானதாக... 

அப்போது கருப்புக்கட்டி தயாரிக்கும் இடத்தில் தொழிலாளர்கள் சுத்தமாக பணியாற்ற வேண்டும். சுகாதாரமான முறையில் தரமானதாக கருப்புக்கட்டி, கற்கண்டு போன்றவற்றை உற்பத்தி செய்ய வேண்டும்.

உற்பத்தி செய்யப்பட்ட கருப்புக்கட்டி, கற்கண்டு ஆகியவற்றை பொட்டலங்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்பும்போது, அதில் தயாரிப்பு தேதி, நிறுவன உரிமம் எண், அவற்றில் சேர்க்கப்பட்ட பொருட்களின் விகிதாசாரம் குறித்து லேபிளில் தெளிவாக அச்சிட்டு ஒட்ட வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினார்.

திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story