குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக குன்னூரில் பா.ஜனதா, இந்து அமைப்பினர் பேரணி
குன்னூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா கட்சி, இந்து அமைப்புகள் சார்பில் பேரணி நடைபெற்றது.
குன்னூர்,
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்களை பாரதீய ஜனதா கட்சி, மற்றும் இந்து அமைப்புகள் ஆதரித்து வருகின்றனர். இஸ்லாமிய அமைப்புகள் இந்த சட்டங்களை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று குன்னூரில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கடையடைப்பு மற்றும் பேரணி நடைபெற்றது.
குன்னூர் நகரப் பகுதியிலும் நகராட்சி மார்க்கெட்டிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இஸ்லாமியர்களின் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. பின்பு மதியம் 2.30 மணியளவில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.
பேரணியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி,பா.ஜ.க. இளைஞரணி தேசிய துணைத்தலைவர் ஏ.பி.முருகானந்தம் உள்பட பாரதீய ஜனதா கட்சி, இந்து அமைப்பின் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய சட்டங்களை ஆதரித்து கோஷம் எழுப்பப்பட்டது.
பேரணி பெட்போர்டு சர்க்கிளில் இருந்து தொடங்கி ஒய்.எம்.சி.ஏ., லாலி ஆஸ்பத்திரி கார்னர், மவுண்ட் ரோடு பஸ் நிலையம் வழியாக வி.பி.தெருவை அடைந்தது. அதனைத்தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து அமைப்பின் முக்கிய தலைவர்கள் பேசினார்கள்.குன்னூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா, இந்து அமைப்புகள் சார்பில் கடையடைப்பு, பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றதையொட்டி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story