ராணித்தோட்டம் பொதுமேலாளர் அலுவலகத்தில் தொ.மு.ச. தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் - சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்பு


ராணித்தோட்டம் பொதுமேலாளர் அலுவலகத்தில் தொ.மு.ச. தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் - சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 6 March 2020 3:30 AM IST (Updated: 5 March 2020 11:22 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் ராணித்தோட்டம் பணிமனை பொதுமேலாளர் அலுவலகத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் தொ.மு.ச. தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் ராணித்தோட்டம் 3-வது பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருபவர் பல்குணன். இவர் நாகர்கோவில் மண்டல தொ.மு.ச. துணை தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நாகர்கோவில் பகுதியில் நடந்த ஒரு கூட்டுறவு சங்க திறப்பு விழா தொடர்பான பிரச்சினையில் பல்குணனை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் திடீரென ராணித்தோட்டத்தில் இருந்து குழித்துறைக்கு பணிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், பல்குணனை மீண்டும் அவர் பணியாற்றிய பணிமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரியும் தொ.மு.ச. சார்பில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை, மாவட்ட செயலாளர் ஞானதாஸ், நாகர்கோவில் மாநகர தி.மு.க. செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனால் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் கன்னியாகுமரியில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். இதையடுத்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வை பொதுமேலாளர் அறைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அரசு போக்குவரத்துக்கழக நெல்லை கோட்ட மேலாளர், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது. அந்த சமயத்தில், அவர் பல்குணன் பணிமாற்ற உத்தரவை11-ந் தேதிக்குள் ரத்து செய்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

முற்றுகை போராட்டத்தில் தொ.மு.ச. பேரவை துணை செயலாளர் இளங்கோ, தி.மு.க. நிர்வாகிகள் ஷேக்தாவூது, பெஞ்சமின், ஜவகர், சாகுல்ஹமீது மற்றும் தொ.மு.ச. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story