திருப்பத்தூர் மாவட்டத்தில், தகுதி உள்ள அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை - உதவி கலெக்டர் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் தகுதி உள்ள அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கிராமநிர்வாக அலுவலர்களுக்கு உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு உதவி கலெக்டர் வந்தனாகார்க் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கிராம நிர்வாக அலுவலர்கள், அந்தந்த ஊரில் நத்தம் புறம்போக்கு பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சேபனை உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு மாற்று இடங்களில் பட்டா வழங்க இடங்களை தேர்வு செய்ய வேண்டும். அந்தந்த கிராமங்களில் தகுதி உள்ள முதியோர், விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று மாதாந்திர உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு தற்போது ரூ.1 லட்சம் வரை சொத்து உள்ளவர்களுக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது. எனவே, அனைவரும் அந்தந்த ஊராட்சிகளில் மனுக்களை பெறவேண்டும். பட்டா மாறுதல்கள், நில அளவைகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். விவசாயிகள் கடன் பெற உடனடியாக அடங்கல் வழங்க வேண்டும்.
வரும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க ஊராட்சிகளில் ஆழ்துளை கிணறுகள், மின்மோட்டார், பைப் லைன்களை சரி செய்து வைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினை உள்ளது என்றால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். ஊராட்சிகளில் நடைபெறும் சம்பவங்களை உடனுக்குடன் மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத்துறை மூலம் கொடுக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திருப்பத்தூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story