ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து தங்கவயலில் அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு
கோலார் தங்கவயலில் ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
கோலார் தங்கவயல்,
கோலார் தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபகலா சசிதர், கடந்த மாதம் கர்நாடக மாநில வணிக மற்றும் தொழிற்சாலை துறை செயலர் மற்றும் ஜவுளி துறை அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், தங்க சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 7 ஆயிரம் ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. மேலும் பி.இ.எம்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான 973 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. இந்த நிலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். தங்கவயலில் முக்கிய நகரங்களை இணைக்கும் ரெயில் போக்குவரத்து வசதி உள்ளது.
தங்கவயல் அருகே சென்னை-பெங்களூரு அதிவேக ரெயில் பாதை செல்கிறது. இதனால் தங்கவயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை எளிதாக கொண்டு செல்ல முடியும். எனவே அனைத்து வசதிகளும் கொண்ட தங்கவயலில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில வணிக மற்றும் தொழிற்சாலைகள் துறை செயலர் மகேஷ்வர் ராவ், மாநில ஜவுளி துறை ஆணையர் சிங், கோலார் மாவட்ட துணை கலெக்டர் தர்ஷன், மாவட்ட ஜவுளி துறை இயக்குனர் சவுமியா, கர்நாடக தொழிற்பேட்டை மேம்பாட்டு துறை அதிகாரிகள் பூஜார், ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழு, நேற்று முன்தினம் தங்கவயல் வந்தனர்.
அவர்கள் தங்க சுரங்கம் மற்றும் பி.இ.எம்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான காலி நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தங்கவயலில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த இந்த குழுவினர், இதுகுறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளனர்.
Related Tags :
Next Story