எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாக இயக்க ஆசை; சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி தமிழ் பெண் என்ஜின் டிரைவர் பேட்டி


எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாக இயக்க ஆசை; சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி தமிழ் பெண் என்ஜின் டிரைவர் பேட்டி
x
தினத்தந்தி 6 March 2020 4:45 AM IST (Updated: 6 March 2020 12:08 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் தினத்தையொட்டி மத்திய ரெயில்வே சார்பில் தமிழ் பெண் என்ஜின் டிரைவர் கவுரவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாக இயக்க ஆசை என அவர் பேட்டி அளித்தார்.

மும்பை, 

சர்வதேச பெண்கள் தினம் வருகிற 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய ரெயில்வேயில் கடந்த 1-ந் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மத்திய ரெயில்வேயில் சாதனை படைத்த பெண் ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

சி.எஸ்.எம்.டி.யில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.கே. சிங், பெண் ஊழியர்களின் பணியை பாராட்டி பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வேயின் தமிழ் பெண் என்ஜின் டிரைவர் இசை செல்வி நாடார் உள்பட பல பெண் ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இசை செல்வி கடந்த 2008-ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவில் ரெயில்வே வேலையில் சேர்ந்தார். எனினும் என்ஜின் டிரைவர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தேர்வு எழுதி கடந்த 2013-ம் ஆண்டு உதவி என்ஜின் டிரைவர் ஆனார். இதன் மூலம் மத்திய ரெயில்வேயில் முதல் தமிழ் பெண் என்ஜின் டிரைவர் என்ற பெருமையையும் பெற்று உள்ளார்.

இதில் அவர் சுமார் 1 ஆண்டு சவால்கள் நிறைந்த கர்ஜத் - புனே இடையே உள்ள மலை வழித்தடத்தில் பணியாற்றியவர் ஆவார். தற்போது இவர் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் என்ஜின் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி ஆகும். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளது. இவர் குடும்பத்துடன் மும்பை பாண்டுப் பகுதியில் வசித்து வருகிறார்.

என்ஜின் டிரைவர் ஆனது குறித்து இசை செல்வி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆசியாவின் முதல் பெண் என்ஜின் டிரைவரான சுரேகா யாதவ் பற்றி இளம்வயதில் நான் கேள்விபட்டுள்ளேன். மேலும் அவரை நேரிலும் பார்த்தேன். அப்போது, தான் என்ஜின் டிரைவா் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. எனவே தான் மேற்கொண்டு கஷ்டப்பட்டு படித்து என்ஜின் டிரைவர் ஆனேன். விரைவில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை தனியாக இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் இந்த பணியில் இருப்பதற்கு எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர். அவர்களின் ஆதரவால் தான் இது சாத்தியமாகி உள்ளது.

நம்மால் முடியாது என பெண்கள் எப்போதும் நினைக்க கூடாது. நாம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். எந்த பணியையும் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story