7 கோவில்களில் கைவரிசை காட்டிய உண்டியல் கொள்ளையன் கைது


7 கோவில்களில் கைவரிசை காட்டிய உண்டியல் கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 6 March 2020 4:30 AM IST (Updated: 6 March 2020 12:32 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை, 

மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.

இந்தநிலையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து சென்ற போது ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் அருமனை அருகே அண்டுகோடு பகுதியை சேர்ந்த ரகு (வயது 40) என்பதும், மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கோவில்களுக்குள் புகுந்து உண்டியல் பணம் திருடி வந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், மார்த்தாண்டம் அருகே கடமக்கோடு கொங்கச்சி கண்ட தர்ம சாஸ்தா கோவிலில் 2 உண்டியல்களை உடைத்து ரூ.10 ஆயிரம் திருடியுள்ளார். வாழைத்தோட்டம் பத்திரகாளியம்மன் கோவில், குளக்கச்சி பத்ரேஸ்வரி அம்மன் கோவில், மருதங்கோடு கல்படகு இசக்கியம்மன் கோவில், கொடுங்குளம் மகாதேவர் கோவில், பாகோடு நாகராஜபுரம் தர்ம சாஸ்தா கோவில் உள்பட 7 கோவில்களில் உண்டியலை உடைத்து காணிக் கை பணத்தை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார்.

வழக்கமாக கோவில்களில் கொள்ளையடிக்கும் நபர்கள், உண்டியல் பணம், சாமி நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வார்கள். ஆனால் கொள்ளையன் ரகு, இதில் வித்தியாசமானவன். கோவிலில் உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அதே சமயத்தில், களுவன்திட்டையில் ஒரு பலசரக்கு கடையில் புகுந்து பணத்தையும் கொள்ளையடித்துள்ளார். இதையடுத்து ரகுவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story