வைகை அணை பாலத்தில் மராமத்து பணி தீவிரம்
வைகை அணையில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பாலம், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மராமத்து செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணை கடந்த 1958-ம் ஆண்டு காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. அதே காலக்கட்டத்தில் வைகை அணையின் முன்பாக ஆண்டிப்பட்டி-பெரியகுளம் சாலையில் வைகை ஆற்றின் குறுக்கே பாலமும் கட்டப்பட்டது. ஆனால் அந்த பாலம், ஒரு கனரக வாகனம் மட்டுமே சென்று வரும் வகையில் குறுகலாக இருந்தது. இதற்கிடையே காலப்போக்கில் அந்த பாலத்தை அதிக அளவில் வாகனங்கள் பயன்படுத்தி வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் குறுகலான பாலத்தின் அருகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்டப்பட்டது. புதிதாக பாலம் கட்டப்பட்ட போதும் பழைய பாலமும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தது.
இந்தநிலையில் வைகை அணை அருகில் உள்ள பழைய பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பாலத்தை சீரமைக்க அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பாலத்தில் மராமத்து பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பழமையான பாலத்தின் கான்கிரீட்டில் அமைக்கப்பட்டு இருந்த கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டு, புதிய கம்பிகள் பொருத்தப்பட உள்ளது. மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் ஏற்பட்டு இருந்த சேதங்கள் அனைத்தும் சரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பாலத்தின் பக்கவாட்டு சுவர்களும் புதுப்பிக்கப்படுகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்து பாலம் புதுப்பொலிவு பெற்று, தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்று ஆண்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story