கெங்குவார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
கெங்குவார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி,
கெங்குவார்பட்டி பேரூராட்சியில் துப்புரவு பணி, பிளீச்சிங் பவுடர் போடுதல் உள்ளிட்ட சில பணிகளுக்கு டெண்டர் அடிப்படையில் வேலை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான டெண்டர் விடுவதில் முறைகேடு நடப்பதாக கூறி ஏற்கனவே வேலை செய்து வரும் சுயஉதவிக்குழு துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன்பிறகு பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக மஸ்தூர் பணியாளர்களும் மறியலில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக மறியலில் ஈடுபட்டதாக மஸ்தூர் பணியாளர்களை வேலைக்கு வரவேண்டாம் என்று சுகாதார அலுவலர்கள் நேற்று தெரிவித்தனர்.
இதையடுத்து மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள், சுகாதார அலுவலர்களை கண்டித்தும், மஸ்தூர் பணியாளர்களை மீண்டும் வேலைக்கு அனு மதிக்க வலியுறுத்தியும், பேரூராட்சியில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க கோரியும் நேற்று 2-வது நாளாக பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் மேரி குளோரி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மீண்டும் மஸ்தூர் பணியாளர்களை வேலைக்கு அனுமதிப்பதாகவும், டெண்டர் முறையாக நடத்தப்படும் என்று கூறினார். இதையடுத்து போராட்டம் நடத்திய துப்புரவு பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story