திருவண்ணாமலையில், யாத்ரி நிவாஸ் கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு - வாரச்சந்தை நடைபெற உள்ள இடத்தையும் பார்வையிட்டார்
திருவண்ணாமலையில் பக்தர்கள் வசதிக்காக ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘யாத்ரி நிவாஸ்’ தங்கும் விடுதி கட்டிட பணிகளை கலெக்டர் கந்தசாமி ஆய்வுசெய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கிரிவலப்பாதையில் உள்ள ஈசான்யலிங்கம் அருகே ரூ.28 கோடி மதிப்பீட்டில் ‘யாத்ரி நிவாஸ்’ தங்கும் விடுதி கட்டப்பட்டு உள்ளது. இந்த விடுதி தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 3 தளங்களாக கட்டப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு தளத்திற்கும் 8 காட்டேஜ்கள் வீதம் 24 காட்டேஜ்கள் உள்ளன. இவற்றில் 96 நபர்கள் தங்கலாம்.
மேலும் ஓட்டல் பிளாக்கில் 124 நபர்கள் தங்கும் வகையில் 63 அறைகளும், டார் மிட்டரி பிளாக்கில் 210 நபர்கள் தங்கும் வகையில் 36 அறைகளும் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 430 நபர்கள் தங்கும் வகையில் 123 அறைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதி மற்றும் குளிர்சாதன வசதியில்லாத அறைகள், டார் மிட்டரிகள் மற்றும் குடில்கள் கட்டப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக பிளாக் ஒன்றுக்கு தலா 2 லிப்ட்களும் அமைக்கப்படுகிறது. இதனை தவிர தனியாக உணவு விடுதியும், ஓட்டுனர்கள் தங்குவதற்கான பகுதி, துணிகளை சலவை செய்வதற்கான பகுதியும் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் லிங்கம் வடிவில் கட்டப்பட்டுள்ளது என்பது தனி சிறப்பாகும்.
இந்த யாத்ரி நிவாஸ் கட்டுமான பணிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது யாத்ரி நிவாஸ் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது கோவில் இணை ஆணையர் ஞானசேகர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பிரமிளா, வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, உதவி கலெக்டர் (பயிற்சி) அனந்த்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை அண்ணா நுழைவு வளைவு அருகில் அமைந்துள்ள ஈசான்ய மைதானத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட மேலாண்மை அலகின் மகளிர் குழுக்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் ஆகியோரின் உற்பத்தி பொருட்கள் நேரடி விற்பனை செய்வதற்கான வாரச்சந்தை நாளை (சனிக்கிழமை) முதல் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த பகுதியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மகளிர் திட்ட அலுவலர் சந்திரா உடனிருந்தார்.
Related Tags :
Next Story