குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது பா.ஜ.க. மாநில செயலாளர் பேட்டி


குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது பா.ஜ.க. மாநில செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 6 March 2020 4:23 AM IST (Updated: 6 March 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது என்று பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. மாநில செயலாளர் கரு.நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. இதனாலேயே பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டத்தால் இந்தியாவில் இருக்கும் எந்த முஸ்லிம்களுக்கும் பாதிப்பு வராது என்பதை பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பலமுறை எடுத்து கூறியுள்ளனர்.

ஆனால், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக எந்தக் கருத்தையும் கூறவில்லை. டெல்லி கலவரம் தொடர்பாகத்தான் அவர் சில கருத்துக்களை கூறினார். அவர் தனிப்பட்ட முறையில் கருத்தை கூறுகிறார்.

முஸ்லிம் மக்கள் உண்மையை புரிந்து கொண்டு போராட்டங்களை வாபஸ் பெற வேண்டும். சட்ட பேரவை நடைபெறும்போது யாரும் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ககூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அதையும் மீறி எம்.பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் பங்கேற்றவர்களின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story