கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடி உள்பட 4 பேர் கைது


கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 6 March 2020 5:22 AM IST (Updated: 6 March 2020 5:22 AM IST)
t-max-icont-min-icon

கொலை செய்யும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் கியாஸ் கம்பெனி அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவு 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி நின்று கொண்டிருந்தனர். இதைப் பார்த்து அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் அதை தடுப்பது என முடிவு செய்து அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் அரியாங்குப்பம் கோட்டைமேடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சீனு என்கிற தெய்வநாயகம் (வயது 38), வில்லியனூரை சேர்ந்த கவுதம் (20), அரியாங்குப்பம் அருந்ததிபுரம் பகுதியை சேர்ந்த நவீன் (19), அம்பேத்கர் வீதியை சேர்ந்த சதீஷ் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.

4 பேர் கைது

இவர்களிடம் மேல்விசாரணை நடத்தியதில் சீனுவுக்கும், அவருடைய உறவினர் அரியாங்குப்பத்தை சேர்ந்த சத்யா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவரை கொலை செய்வதற்காக சீனு தனது கூட்டாளிகளுடன் அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து கத்தி, இரும்புகுழாய் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இவர்களில் சீனு ரவுடி ஆவார். இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story