விழுப்புரத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம்


விழுப்புரத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 6 March 2020 3:15 AM IST (Updated: 6 March 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். தேர்தல் ஆணைய உறுப்பினர் செயலாளர் சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 293 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 8 பேரூராட்சிகளுக்குட்பட்ட 126 வார்டுகள், 2 நகராட்சிகளுக்குட்பட்ட 75 வார்டுகள், 688 கிராம ஊராட்சிக்குட்பட்ட 5 ஆயிரத்து 88 சிற்றூராட்சி வார்டுகள் மற்றும் 28 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கான வரைவு பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மொத்தம் 95 ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 14 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 80 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒரு மனு, தேர்தலுக்கு சம்பந்தமில்லாதது என்றார். இதனை தொடர்ந்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

மாசிலாமணி எம்.எல்.ஏ.:- உள்ளாட்சி தேர்தலில் அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை வழங்கப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்று பஞ்சாயத்து ராஜ் சட்டம் சொல்கிறது. ஆனால் அதை பின்பற்றவில்லை. 20 ஆண்டுகளாக பெரிய, பெரிய ஊராட்சிகள் பிரிக்கப்படாமலேயே தேர்தல் நடந்து வருகிறது. குறிப்பாக ஒலக்கூர் ஒன்றியத்தில் மாம்பாக்கம், செம்பாக்கம், மேல்சிவிரி, ஆத்திப்பாக்கம், வடசிறுவளூர், வெள்ளிமேடுபேட்டை, மேல்மாவிலங்கை, வைரபுரம், மேல்ஆதனூர், நெய்குப்பி உள்ளிட்ட ஊராட்சிகள் 20 ஆண்டுகளாக பிரிக்கப்படாமலேயே உள்ளது. அதேபோல் மயிலம் ஒன்றியத்தில் சின்னநெற்குணம், எடப்பாளையம் ஆகிய 2 கிராமங்களும் சேர்ந்து ஒரே ஊராட்சியாக உள்ளது. இதில் எடப்பாளையத்தை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும். நெடிமோழியனூர், நெடி ஆகிய 2 கிராமங்களும் சேர்ந்து ஒரே ஊராட்சியாக உள்ளது. இதில் நெடி கிராமத்தை தனி ஊராட்சியாக பிரிக்க வேண்டும். வல்லம் ஒன்றியத்தில் நெகனூர், நெகனூர் புதூர் ஆகிய கிராமங்கள் சேர்ந்து ஒரே ஊராட்சியாக உள்ளது. இதில் புதூர் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்.

மஸ்தான் எம்.எல்.ஏ.:- செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் 60 ஊராட்சிகளும், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளும் உள்ளன. இவற்றில் செஞ்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து ஆலம்பூண்டியை தனி ஊராட்சி ஒன்றியமாகவும், மேல்மலையனூரை இரண்டாக பிரித்து வளத்தியை தனி ஊராட்சி ஒன்றியமாகவும் அறிவிக்க வேண்டும். செஞ்சி ஒன்றியத்தில் 24 வார்டுகள் உள்ளன. இவற்றில் 11-வது வார்டில் 4 ஊராட்சிகள் அடங்கியுள்ளது. இதில் உள்ள 2 ஊராட்சிகளை பிரித்து சிறிய வார்டாக உள்ள 19-வது வார்டில் இணைக்க வேண்டும்.

இதே போல் பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வார்டு மறுவரையறை தொடர்பாக கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கூறுகையில், வார்டு மறுவரையறை தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்படும். இங்கு கொடுக் கப்பட்டுள்ள மனுக்கள் மீது துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து உரிய விசாரணை நடத்துவார்கள். எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியுமோ அது ஏற்றுக்கொள்ளப்படும். இதனை மாநில தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன் பின்னர் அரசாணை வெளியிடப்படும். முன்மொழிவு செய்யப்பட்ட வார்டுகள் இறுதி செய்யப்படாது என்றார்.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story