கர்நாடக பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிப்பு பெட்ரோல், மதுபானம் விலை உயருகிறது - தோட்டக்கலை பயிர்கள் பயிரிட விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை


கர்நாடக பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிப்பு பெட்ரோல், மதுபானம் விலை உயருகிறது - தோட்டக்கலை பயிர்கள் பயிரிட விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 6 March 2020 6:14 AM IST (Updated: 6 March 2020 6:14 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்- மந்திரி எடியூரப்பா நேற்று தாக்கல் செய்தார். இதில் பெட்ரோல், டீசல் விலை, மதுபானங்களின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தோட்டக் கலைத் துறை விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பெங்களூரு விதானசவுதாவில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது.

இந்த கூட்டத் தொடரில் 5-ந்தேதி (அதாவது நேற்று) கர்நாடக அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கர்நாடக அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (வரவு-செலவு திட்டம்) நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா சட்ட சபையில் நேற்று தாக்கல் செய்தார்.

அவர் பச்சை சால்வை தோள் மீது போட்டிருந்தார். இது எடியூரப்பா தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட். அதே நேரத்தில் நடப்பு பா.ஜனதா ஆட்சியின் முதல் பட்ஜெட் ஆகும். சரியாக காலை 11 மணிக்கு அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து புத்தகத்தை வாசிக்க தொடங்கினார்.

ஆங்கிலத்தில் 96 பக்கங்களை கொண்ட அந்த புத்தகத்தை ஒரு மணி நேரம் 50 நிமிடங் களில் வாசித்து நிறைவு செய்தார். கடந்த கால புத்தகங்களை ஒப்பிடும்போது, இந்த புத்தகத்தில் பக்கங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 893 கோடி மதிப்பீட்டில் இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், வரிகள் உயர்வு குறித்த அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

பெட்ரோல்-டீசலின் மீதான கலால் வரி அதிகரிப்பால் பெட்ரோல்-டீசல் விலை உயருகிறது. அதாவது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.60-ம், டீசல் ரூ.1.59-ம் அதிகரிக்கிறது.

மேலும் புதிய நிலையில் வரும் தூங்கும் வசதி கொண்ட பஸ்களின் இருக்கைக்கான வரி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மதுபான வகைகளின் மீதான வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், ரைதஸ்ரீ திட்டத்தின் கீழ் வறட்சியை தாங்கும் பயிர்களான சாமை உள்பட சிறுதானியங்கள் சாகுபடி செய்ய ஒரு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், இது அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரூ.143 கோடி உபரி பட்ஜெட் ஆகும்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

நீர்ப்பாசன வசதி

* வறட்சி பாதித்த 76 தாலுகாக்களில் மழைநீரை சேமிக்கவும், தண்ணீரை பாதுகாக்கவும் 100 நீர்நிலை மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* தோட்டக்கலை பயிர்களை பயிரிடும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

* தண்ணீர் பட்ஜெட் திட்டத்தின் கீழ் தண்ணீர் பயன்பாட்டை தணிக்கை செய்தல், அதன் தட்டுப்பாட்டை போக்க ‘ஜலகிராம’ அட்டவணை ஒவ்வொரு கிராமத்திலும் தயாரிக்கப்படும்.

* கடலோர மண்டலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கின்டி அணைக்கட்டு திட்டம் அமல்படுத்தப்படும்.

* வரும் ஆண்டில் 1 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

* மகதாயி திட்டத்தின் கீழ் கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகளுக்கு வரும் ஆண்டில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மீன் ஏற்றுமதி மையம்

* செயற்கை கருத்தரித்தல் மூலம் பசு மாட்டு கன்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

* நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீன்பிடிப்பதை ஊக்குவிக்க மத்சய விகாஸ் யோஜனே திட்டம் அமல்படுத்தப்படும்.

* ‘மகிளா மீனுகார சபளிகரன’ திட்டத்தின் கீழ் மீன்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல 1,000 பெண் மீனவர்களுக்கு இரண்டு சக்கர வாகனம் வழங்கப்படும்.

* மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ் ரூ.12.50 லட்சம் செலவில் மங்களூருவில் ஒரு நவீன கடலோர மீன் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும்.

* உடுப்பி மாவட்டம் ஹெஜமடிகோடியில் ரூ.181 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.

* கூட்டுறவு வங்கிகளில் டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்களை வாங்கிய விவசாயிகளின் கடன்கள் மீதான வட்டியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.466 கோடி நிதி ஒதுக்கப்படும்.

2 லட்சம் வீடுகள்

* பாக்கு விவசாயிகள் ரூ.2 லட்சம் வரை பெறும் கடனுக்கு 5 சதவீத வட்டி விலக்கு அளிக்கப்படும். இந்த வட்டியை அரசே ஏற்கும்.

* சிறு-நடுத்தர விவசாயிகளின் நலனுக்காக தங்களின் விளை பொருட்களை நேரடியாக சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல 500 விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து 5 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள்.

* பிற்படுத்தப்பட்டோர் நல வாரியங்களுக்கு ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கும் குடிசை பகுதிகளை மேம்படுத்த ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* கிறிஸ்துவ சமூகத்தின் வளர்ச்சிக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* வரும் ஆண்டில் 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கப்படும்.

இதயநோய் பிரச்சினை

* எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தொகுதிகளில் 3 அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அவற்றை மேம்படுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும்.

* ‘சம்ப்ரம சனிவார’ திட்டத்தின் கீழ் மாதத்தில் 2 சனிக்கிழமைகள் புத்தக பை இல்லாத நாளாக கடைபிடிக்கப்படும்.

* அரசு-தனியார் பங்களிப்பில் சோதனை அடிப்படையில் 2 மாவட்டங்களில் அனைத்து தாலுகா ஆஸ்பத்திரிகளிலும் தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யு.) தீவிரமான முறையில் கண்காணிக்கப்படும்.

* அரசு-தனியார் பங்களிப்பில் பெங்களூருவில் உள்ள கே.சி.ஜெனரல் மற்றும் சி.வி.ராமன்நகர் ஆஸ்பத்திரிகளில் இதயநோய் பிரச்சினைக்கு ‘காத்லேப்’ அமைத்து சிகிச்சை அளிக்கப்படும்.

இலவச மாதாந்திர பஸ் பாஸ்

* ரூ.60 லட்சம் செலவில் காதுகேளாதோருக்கு சுயதொழில் செய்ய இலவசமாக தையல் எந்திரம் வழங்கப்படும்.

* மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தங்களின் குழந்ைதயை வளர்க்க 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படுவது 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.

* ‘முக்கிய மந்திரிகள் ஆரோக்கிய சுரக்‌ஷா’ திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற 1 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்ட கார்டுகள் (ப்ரீபெய்டு கார்டுகள்) வழங்கப்படும்.

* ‘வனிதா சங்காதி’ திட்டத்தின் கீழ் ஆயத்த ஆடை உற்பத்தி (கார்மெண்ட்ஸ்) நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு ரூ.25 கோடி செலவில் இலவச மாதாந்திர பஸ் பாஸ் வழங்கப்படும்.

* கல்யாண-கர்நாடக பகுதியின் வளர்ச்சிக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும்.

தேங்காய் தொழில் பூங்கா

* ‘கிராமின சுமர்க் யோஜனே’ திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.

* பெட்ரோல் மீதான கலால்வரி 32 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாகவும், டீசல் மீதான கலால்வரி 21 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாகவும் உயர்த்தப்படும். இதன் மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.60-ம், டீசல் ரூ.1.59-ம் உயருகிறது.

* இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் மீதான வரி 6 சதவீதம் உயர்த்தப்படும்.

* குடும்பத்தில் முதல் முறையாக ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடு வாங்குவோருக்கு முத்திரைத்தாள் கட்டணம் 2 சதவீதமாக குறைக்கப்படும்.

* துமகூரு மாவட்டம் திப்தூரில் தேங்காய் தொடர்பான தொழில் பூங்கா அமைக்கப்படும்.

110 கிராமங்கள்

* ஹாவேரியில் உள்ள சிக்கான் மற்றும் உடுப்பியில் கார்கலாவில் புதிதாக ஜவுளி பூங்கா நிறுவப்படும். இதன் மூலம் 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

* அனைத்து அரசு அலுவலகங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவர ரூ.400 கோடி செலவில் 25 மாடிகள் கொண்ட இரட்டை கட்டிடம் பெங்களூரு அனந்த்ராவ் சர்க்கிளில் கட்டப்படும்.

* பெங்களூரு மாநகராட்சியில் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை நடத்தும் வகையில் பெங்களூரு மாநகராட்சிக்கு என்று தனி மாநகராட்சி சட்டம் இயற்றப்படும்.

* திட்டக்கழிவு மேலாண்மையில் பெங்களூருைவ முன்மாதிரி நகரமாக மாற்ற ரூ.999 கோடியில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

* பெங்களூரு மாநகராட்சியில் புதிதாக 110 கிராமங்கள் சேர்க்கப்பட்டன. அங்கு குடிநீர், வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதிகளில் ரூ.1,000 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும்.

அனுபவ மண்டபம்

* பெங்களூருவில் ரூ.18 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும் புறநகர் ரெயில் திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* பெங்களூரு-ஓசூர், யஷ்வந்த்புரம்-சன்னசந்திரா இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்க ரெயில்வே துறை ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு ஆகும் செலவில் 50 சதவீதத்தை மாநில அரசு ஏற்கும்.

* பெங்களூரு நகரின் கடைநிலையில் உள்ள பகுதிக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் எலெக்ட்ரிக் பைக் டாக்சி அறிமுகம் செய்யப்படும்.

* பசவகல்யாணில் ரூ.500 கோடியில் பசவண்ணரின் அனுபவ மண்டபம் (உலகின் முதல் நாடாளுமன்றம்) அமைக்கப்படும்.

* பெங்களூருவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடாவுக்கு ரூ.66 கோடி செலவில் 100 அடி உயர வெண்கல சிலை நிறுவப்படும்.

திரைப்பட நகரம்

* பெங்களூருவில் ரூ.500 கோடியில் சர்வதேச தரத்தில் திரைப்பட நகரம் உருவாக்கப்படும்.

* ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.900 மோட்டார் வாகன வரி விதிக்கப்படும்.

* புதிதாக வரும் தூங்கும் வசதி கொண்ட பஸ்களுக்கு ஒரு தூங்கும் படுக்கைக்கு 3 மாதங்களுக்கு ரூ.4 ஆயிரம் வரி நிர்ணயிக்கப்படும்.

மேற்கண்ட அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

Next Story