இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து கோவை புறநகர் பகுதியில் கடைகள் அடைப்பு


இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து கோவை புறநகர் பகுதியில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 7 March 2020 3:30 AM IST (Updated: 6 March 2020 11:25 PM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து கோவை புறநகர் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

கோவை,

கோவை போத்தனூர் கடைவீதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 33), இந்து முன்னணி பிரமுகர். இவர் கடந்த 4-ந் தேதி இரவு காந்திபுரத்தில் நடந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அவர், நஞ்சுண்டாபுரம் அருகே சென்றபோது மர்ம கும்பலால் தாக்கப்பட்டார்.

படுகாயம் அடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப் பட்டது. பின்னர் அது இன்று (சனிக்கிழமை) நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கோவை புறநகர் பகுதியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சோமனூர், கருமத்தம்பட்டி, அன்னூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இதனால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் அன்னூர் சந்திப்பு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரண மாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக வெளியூரில் இருந்து வந்தவர்கள் ஓட்டல்கள், பேக்கரிகள் மூடப்பட்டு இருந்ததால் அவதிப்பட்டனர்.

இது போல் வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள் மற்றும் சில டீக்கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. கடையடைப்பு காரணமாக வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.

ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் சுற்றுலா பயணிகள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். சில டீக்கடைகள் திறந்து இருந்தன. அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதுபோல் கிணத்துக்கடவிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கிணத்துக்கடவு பஸ்நிலையம், ஆர்.எஸ்.ரோடு, பழைய சோதனைசாவடி உள்பட பல இடங்களில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் மூடப்பட்டன. மருந்து கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன.

கடையடைப்பு நடந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் அவ்வப்போது வாகனங்களில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட் டனர். 

Next Story