ரூ.139 கோடியில் இணை மின் உற்பத்தி நிலையம்- நவீனமயமாக்கப்பட்ட ஆலை; முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்


ரூ.139 கோடியில் இணை மின் உற்பத்தி நிலையம்- நவீனமயமாக்கப்பட்ட ஆலை; முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 7 March 2020 4:00 AM IST (Updated: 7 March 2020 12:44 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ரூ.139 கோடியில் அமைக்கப்பட்ட மதிப்பில் இணை மின் உற்பத்தி நிலையம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஆலையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா எறையூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ரூ.138 கோடியே 86 லட்சத்தில் புதியதாக நிறுவப்பட்ட 18 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட சர்க்கரை ஆலையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் மாவட்ட கலெக்டர் சாந்தா குத்துவிளக்கேற்றி கல்வெட்டை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அப்போது கலெக்டர் சாந்தா கூறுகையில், இந்த ஆண்டு கரும்பு அரவைப் பருவத்தில் இணை மின் உற்பத்தி நிலையம் மற்றும் ஆலை நவீனமயமாக்கலுடன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கரும்பு அரவைப்பகுதி எந்திரங்களும், கொதிகலனும் புதிதாக நிறுவப்பட்டதால் எந்திரப்பழுது குறைக்கப்பட்டு, கரும்பு குறித்த காலத்தில் அரைக்கப்பட்டு, விவசாயிகள் வெகுவாக பயன் அடைந்து வருகிறார்கள்.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அரைக்கப்பட்டு வருகிறது. இந்த அரவைப்பருவத்தில் 1,75,000 டன் கரும்பு அரவை செய்ய இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை 1,37,000 டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை கட்டுமானம் 10.10 சதவீதம் ஆகும். இன்று வரை 8.55 சதவீதம் ஆகும். இது கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்னர் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட சாதனையாகும். இந்த அரவை பருவத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி வரை கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.20 கோடியே 60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 18 மெகாவாட் இணை மின் உற்பத்தி செய்து, அதில் ஆலையின் பயன்பாட்டிற்காக 4.5 மெகாவாட் போக, மீதமுள்ள மெகாவாட்டை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதில் ஆலையின் மாவட்ட வருவாய் அலுவலரும், தலைமை நிர்வாகியுமான முகம்மது அஸ்லம், துணை தலைமை பொறியாளர் மணிவண்ணன், துணை தலைமை ரசாயனர் மாதவன், கரும்பு பெருக்கு அலுவலர் வேணுகோபால், நிர்வாக அலுவலர் குமாரராஜா, தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், அனைத்து த் துறை அலுவலர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story