போலீஸ் என்கவுண்ட்டர் எதிரொலி: பிரபல ரவுடிகள் 5 பேர் கோர்ட்டில் சரண் காவலில் எடுத்து போலீஸ் விசாரணை


போலீஸ் என்கவுண்ட்டர் எதிரொலி:   பிரபல ரவுடிகள் 5 பேர் கோர்ட்டில் சரண்   காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 7 March 2020 4:30 AM IST (Updated: 7 March 2020 1:32 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ரவுடியை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றதன் எதிரொலியாக பிரபல ரவுடிகள் 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு, 

பெங்களூரு லக்கரேயை சேர்ந்தவர் பிரபல ரவுடி பரத் என்ற ஸ்லம் பரத். இவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல், கொலை முயற்சி உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் தலைமறைவாக இருந்த ரவுடி பரத்தை வடக்கு மண்டல போலீசார் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இணைந்து கைது செய்திருந்தனர். பின்னர் கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி போலீசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிய பரத் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள ரவுடிகள் பீதி அடைந்தனர்.

அதே நேரத்தில் தலைமறைவாக இருந்த பரத்தின் கூட்டாளிகளை பிடிக்கவும் வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சசிகுமார் தலைமையிலான போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இதற்காக 4 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.

5 பேர் கோர்ட்டில் சரண்

இந்த நிலையில், பிரபல ரவுடிகளான மது என்ற ஸ்லம் மது(வயது 23), முனிராஜ் என்ற கரியா(28), சதீஸ் (25), அஜய் (24), வினய்குமார் (25) ஆகிய 5 பேரும் நேற்று முன்தினம் பெங்களூரு 7-வது மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்பு சரண் அடைந்துள்ளனர். அவர்கள் 5 பேரையும் வடக்கு மண்டல போலீசார் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து, துணை போலீஸ் கமிஷனர் சசிகுமார் தலைமையிலான போலீசார், 5 ரவுடிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதாவது சரண் அடைந்தவர்களில் மது, வினய்குமார் ரவுடி பரத்தின் கூட்டாளிகள் ஆவார்கள். மேலும் முனிராஜ், சதீஸ் அஜய் ஆகிய 3 பேரும் எதிர்கோஷ்டியை சேர்ந்த ரவுடிகள் ஆவார்கள். இவர்களில் மது மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 14 வழக்குகளும், முனிராஜ் மீது 10 வழக்குகளும், மற்ற 3 பேர் மீதும் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் 5 பேரும் போலீசாரின் என்கவுண்ட்டருக்கு பயந்து கோர்ட்டில் சரண் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story