அனைத்து துறை வளர்ச்சிக்கான பட்ஜெட் துணை முதல்-மந்திரி அஜித்பவார் பேட்டி
அனைத்து துறை வளர்ச்சியையும் நோக்கமாக கொண்ட பட்ஜெட் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் தெரிவித்தார்.
மும்பை,
மராட்டிய சட்டசபையில் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் துணை முதல்-மந்திரி அஜித்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இது மக்களின் அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட மக்களுக்கான பட்ஜெட். அனைத்து துறைகளின் வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டது. இது ஒட்டுமொத்த மராட்டியத்துக்கான பட்ஜெட். சில பிராந்தியகளுக்கு மட்டுமானது அல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்கும் மக்கள், நிச்சயமாக பட்ஜெட் குறித்து திருப்தியை வெளிப்படுத்துவார்கள்.
மாநில வரலாற்றில் முதல்முறையாக சுற்றுலாத்துறைக்கு ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம்.
மின்கட்டணம் குறைப்பு
தொழில்களை ஊக்குவிப்பதற்காக தொழிற்சாலை மின்கட்டணத்தை 1.8 சதவீதம் குறைத்து இருக்கிறோம். இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். ஆனால் தொழில்கள் பாதிக்கப்பட கூடாது. சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் மும்பை, புனே, பிம்பிரி-சிஞ்ச்வாட், நாக்பூரில் முத்திரைதாள் வரி 1 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட் அறிவிப்புகள் எவ்வாறு மக்களால் உணரப்படுகிறது என்பதை அறிய முயற்சிப்போம்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க...
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்.
எங்கள் பட்ஜெட்டில் எந்த தவறும் இல்லை. பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கும் பயன்படுத்த போகிறோம். இதற்காக ‘பசுமை நிதி’ என்ற திட்டம் உருவாக்கப்படும்.
ஏனெனில் சுற்றுச்சூழல் தான் உண்மையான பிரச்சினை. காலநிலை மாற்றம் மக்களுக்கு தெரியும். நாங்கள் இந்த நிதியை வேறு எதற்கும் தவறாக பயன்படுத்த மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story