பெட்ரோல், டீசல் விலை உயருகிறது மகளிர் போலீஸ் நிலையம் அறிமுகம் மராட்டிய பட்ஜெட்டில் அறிவிப்பு
மராட்டிய பட்ஜெட்டில் முத்திரை தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மாவட்டந்தோறும் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டிய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நேற்று நிதி இலாகாவை கவனித்து வரும் துணை முதல்-மந்திரி அஜித்பவார் தாக்கல் செய்தார்.
முதல் பட்ஜெட்
கொள்கையில் முரண்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அமைத்த கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் இதுவாகும். மேலும் கூட்டணி அரசு பதவி ஏற்று 100 நாட்கள் நிறைவு பெற்ற நேற்றைய தினத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டில் மகளிர் போலீஸ் நிலையங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயம், சுற்றுலா துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பொருளாதார மந்த நிலையை கவனத்தில் கொண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த பட்ஜெட்டின் வரி வருவாய் ரூ.3 லட்சத்து 47 ஆயிரத்து 457 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் வருவாயை விட செலவினம் அதிரித்து இருப்பதால், இது ரூ.9 ஆயிரத்து 511 கோடி பற்றாக்குறை பட்ஜெட் ஆகும்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
மகளிர் போலீஸ் நிலையம்
* பெண்கள் பாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மராட்டியத்தில் மாவட்டம் தோறும் மகளிர் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும். அந்த போலீஸ் நிலையத்தில் பெண் போலீசார் மட்டுமே பணிபுரிவார்கள். மாவட்டத்தில் உள்ள எந்த பகுதியை சேர்ந்த பெண்ணும் அங்கு சென்று புகார் அளிக்க முடியும்.
மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்படும். இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் ஆஜராக பெண் வக்கீல்கள் நியமிக்கப்படுவார்கள்.
முத்திரை தாள் கட்டணம்
* மும்பை பெருநகர வளர்ச்சி ஆணைய (எம்.எம்.ஆர்.டி.ஏ) பகுதிகள் மற்றும் புனே, பிம்ப்ரி சிஞ்ச்வாட், நாக்பூர் மாநகராட்சி பகுதிகளில் சொத்துகளை பதிவு செய்வதற்கான முத்திரை தாள் கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. பொருளாதார மந்த நிலை நிலவி வரும் வேளையில் இந்த முத்திரை தாள் கட்டண குறைவு ரியல் எஸ்டேட் தொழிலுக்கு ஊக்கமளிக்கும்.
* தொழிற்சாலை பயன்பாட்டுக்கான மின்கட்டணம் 9.3 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
மேற்கண்ட வரி சலுகைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
பெட்ரோல், டீசல் விலை
* பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1 உயரும். இது மாநில அரசின் கருவூலத்திற்கு கூடுதலாக ரூ.1,800 கோடி வருவாயை ஈட்டி தரும்.
* ரூ.2 லட்சம் வரையிலான விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அரசு ஏற்கனவே அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
* ரூ.2 லட்சத்துக்கு மேல் பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளுக்கு அரசு புதிய சலுகை திட்டத்தை அறிமுகம் செய்கிறது. அதன்படி 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை விவசாயிகள் வாங்கியிருந்த கடனில் ரூ.2 லட்சம் வரை மாநில அரசு அடைக்கும். அதற்கு மேல் உள்ள கடன் தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகள் ஒரே தவணையில் வங்கியில் செலுத்த வேண்டும்.
ஊக்கத் தொகை
* 2018-19 நிதியாண்டில் பயிர்க்கடன் வாங்கி அதன் தவணைகளை, இந்த ஆண்டு (2020) ஜூன் வரை ஒழுங்காக செலுத்தி வரும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
* ரூ.10 ஆயிரம் கோடி செலவில் நிறைவு பெறாத நீர்ப்பாசன திட்ட பணிகள் முடிக்கப்படும்.
* ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் மாநிலத்தில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய பம்ப் செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் சோலார் விவசாய பம்ப் செட்டுகளை அமைக்க ரூ.10 ஆயிரம் கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.670 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சிவ்போஜன்
* மலிவு விலை உணவகங்கள் மூலம் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கும் ‘சிவ்போஜன்’ திட்டத்துக்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
* சுற்றுலாத்துறைக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story