திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது 61 பவுன் தங்க நகைகள் பறிமுதல்


திருவள்ளூர் மாவட்டத்தில்   தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது   61 பவுன் தங்க நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 March 2020 5:01 AM IST (Updated: 7 March 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 61 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல், ஊத்துக்கோட்டை, கடம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளைகள் நடைபெற்று வந்தன. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேலு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார், அந்த பகுதியில் தொடர் கொள்ளை சம்பவங்கள் பட்டப்பகலில் ஒரேமாதிரியாக நடந்திருப்பதை முதலில் கண்டறிந்தனர். எனவே, இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது ஒரே கும்பலா? அல்லது தனிநபரா? என்று ஆய்வு செய்தனர்.

சுற்றிவளைத்தனர்

அப்போது, கொள்ளையில் ஈடுபட்டது தனிநபர் என்பதை பதிவான கை ரேகைகளின் மூலமும், கண்காணிப்பு கேமரா மூலமும் போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து , தனிப்படை போலீசார் பூச்சி ஆத்திப்பேடு பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்ற போது, போலீசாரை கண்டதும் ஒருவர் திடீரென்று தப்ப ஓட முயற்சித்தார்.. உடனே சந்ததேகமடைந்த போலீசார், அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் சென்னை, கிண்டி, ஆளாட்சி நகர், 4-வது தெருவை சேர்ந்த அரவிந்தகுமார் (வயது 36) என்பது தெரியவந்தது. இவர் திருவள்ளூர் மாவட்டம் கன்னிகாபுரம், வாணியன்சத்திரம், பூச்சிஅத்திப்பேடு,கடம்பத்தூர், ஊத்துக்கோட்டை பருத்தி மேனி குப்பம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது தெரிய வந்தது.

61 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டியதும், 28 வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர், 5 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்றதும் தெரியவந்தது. பின்பு போலீசார் அரவிந்த்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 61 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்..

அதன்பின்னர் அவரை வெங்கல் போலீசார் திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story