கல்வராயன்மலையில் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி சோதனை, 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு - 300 கிலோ வெல்லம் பறிமுதல்
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலையில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது, 300 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 50-க்கும் அதிகமான கிராமங்களில் சாராய வியாபாரிகள் சாராயம் காய்ச்சி மலையடிவார கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். இதனை தடுப்பதற்காக மலை கிராமங்களில் போலீசார் அடிக்கடி சாராய வேட்டை நடத்துகிறார்கள்.
அந்த வகையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 3 லட்சம் லிட்டர் சாராய ஊறலையும், 50 ஆயிரம் லிட்டர் சாராயத்தையும் கண்டுபிடித்து அழித்தனர். சாராயம் காய்ச்சுவதற்காக மலை கிராமங்களில் சாராய வியாபாரிகள் பதுக்கி வைத்திருந்த 20 ஆயிரம் கிலோ வெல்லமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 8 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் இன்னமும் சாராயம் காய்ச்சும் தொழிலை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் நேற்று கல்வராயன் மலை கிராமங்களுக்கு போலீஸ் படையுடன் நேரடியாக சென்று அதிரடி சோதனை நடத்தினார். இதில் ஈச்சங்காடு கிராமத்தில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலையும், அருவங்காடு கிராமத்தில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 300 கிலோ வெல்லத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் போது தப்பிச்சென்ற ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த சாராய வியாபாரி சின்னத்துரை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுபவர்களை கட்டுப்படுத்த மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு உள்ளூர் கிராம மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். சாராயம் காய்ச்சி விற்பவர்கள் மனந்திருந்தி வாழமுன்வந்தால் அவர்கள் மாற்றுத்தொழில் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. சாராய வியாபாரிகள் சாராயம் காய்ச்சும் தொழிலை விடாவிட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் கூறினார்.
Related Tags :
Next Story