சென்னை தரமணியில் பரிதாபம் வேன் மோதி கணவன்-மனைவி பலி ‘டயாலிசிஸ்’ சிகிச்சைக்காக சென்றபோது விபத்து


சென்னை தரமணியில் பரிதாபம்   வேன் மோதி கணவன்-மனைவி பலி   ‘டயாலிசிஸ்’ சிகிச்சைக்காக சென்றபோது விபத்து
x

மனைவியை ‘டயாலிசிஸ்’ சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றபோது லோடு வேன் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த மேடவாக்கம் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் நீதிராஜன் (வயது 46). இவருடைய மனைவி பாரதி (37). இவருக்கு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ‘டயாலிசிஸ்’ செய்ய நேற்று அதிகாலை நீதிராஜன், தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றார்.

தரமணி 100 அடி சாலையில் சென்றபோது எதிரே தண்ணீர் கேன்கள் ஏற்றி வந்த லோடுவேன் இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர்.

கணவன்-மனைவி பலி

இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நீதிராஜன் பரிதாபமாக இறந்தார்.

மேல் சிகிச்சைக்காக பாரதியை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

இதுகுறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து லோடு வேன் டிரைவரான தரமணி அண்ணாநகரைச் சேர்ந்த சரவணன் (39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.

Next Story