பொங்கலூர் பகுதியில் பெட்ரோல் குழாய் பதிக்க நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு


பொங்கலூர் பகுதியில் பெட்ரோல் குழாய் பதிக்க நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 7 March 2020 4:00 AM IST (Updated: 7 March 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் பகுதியில் பெட்ரோல் குழாய் பதிப்புக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தனித்துணை கலெக்டரிடம் மனு அளித்தனர்.

நல்லூர்,

தமிழகத்தில் பாரத் பெட்ரோலியத்தின் ஐ.டி.பி.எல்.குழாய் மூலம் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம் மத்திய, மாநில அரசு அனுமதியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம், இருகூரில் இருந்து பெங்களூரு தேனகுந்தி வரை நிலத்தின் அடியில் குழாய் பதிப்பதற்காக நிலங்களை கையகப் படுத்தி வருகின்றனர்.

சில பகுதிகளில் விவசாய நிலங்களின் வழியாக குழாய் பதிப்புக்கு நிலம் கையகப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறி குழாய் வழித்தடங்களில் உள்ள நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசுக்கு மறுப்பு தெரிவித்து மனு அளித்திருந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்த குழாய் பதிப்பு திட்ட தனித்துணை கலெக்டர் புஷ்பா நேற்று முன்தினம் பொங்கலூர் அருகே உள்ள கண்டியன் கோவில், அலகுமலை மற்றும் படியூர், சிவன்மலை, காங்கேயம் பகுதியை சேர்ந்த மனு அளித்த 30 விவசாயிகளிடம் விசாரணை நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் அழைப்பு விடுத்திருந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு விவசாயிகள் திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மனுதாரர்களுடன் கூடுதலாக விவசாயிகள் வந்ததால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மனு மீது விசாரணை நடத்த அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், எனவே தேவைப்படுபவர்கள் மனு அளிக்கலாம் என்றதும் அனைவரும் கலைந்துசென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் கண்டியன்கோவில், அலகுமலை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அந்த விவசாயிகளிடம் வந்து தனித்துணை கலெக்டர் புஷ்பா மனுக்களை பெற்றுக்கொண்டார். அத்துடன் விவசாயிகளின் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story