மானோஜிப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு; கலெக்டர் நேரில் ஆய்வு
தஞ்சை அருகே மானோஜிப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி கலெக்டர் கோவிந்தராவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. இதற்காக மேடை அமைக்கப்பட்டு, மாடுகள் வரிசையாக வாடிவாசலுக்கு செல்வதற்காக கம்புகளால் தடுப்புகள் அமைத்து பாதை அமைக்கப்பட்டுள்ளது. களத்தில் வீரர்கள், காளைகளுக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டுள்ளன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்க தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்றுவரை 700 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் 400 பேர் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், வாடிவாசலுக்கு காளைகள் வரிசையில் கொண்டு வரப்படும் இடம், பார்வையாளர் நிற்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் அவர், மருத்துவக்குழுவினர் அமரும் இடம், வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்படும் இடம், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய பாதை ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
கால்நடைகளுக்கு தீவனங்களும், தண்ணீரும், வீரர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். மாடுகளை அவிழ்த்து விடும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், களத்தில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே விளக்க வேண்டும் எனவும், தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், ஒலிபெருக்கிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் வெங்கடேஸ்வரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story