மதுரை அருகே, கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தை கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு - விசாரணை நடத்த வலியுறுத்தல்


மதுரை அருகே, கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தை கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு - விசாரணை நடத்த வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 March 2020 4:00 AM IST (Updated: 7 March 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே பிறந்த ஒரு மாதத்தில் பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

செக்கானூரணி,

மதுரை அருகே செக்கானூரணி புள்ளநேரி கிராமத்தை சேர்ந்த பழ வியாபாரியான வைரமுருகன் என்பவரது பெண் குழந்தை, பிறந்த 1 மாதத்தில் கொலை செய்யப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் 2-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோரே குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து வைரமுருகன், அவரது மனைவி சவுமியா மற்றும் வைரமுருகனின் தந்தை சிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

பெண் குழந்தைகள் கள்ளிப்பால் மற்றும் எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த சம்பவங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் அதே பாணியில் கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இதனை முளையிலேயே கிள்ளி எறிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தி அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மீனாட்சிபட்டியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் ஐக்கிய பெண்கள் கூட்டமைப்பு செயலாளர் சரசுவதி கூறியதாவது:-

நாங்கள் கடந்த 30 வருடங்களாக செக்கானூரணி மற்றும் உசிலம்பட்டி பகுதியில் பெண்சிசுக்கொலை தடுப்பு பணி செய்து வருகிறோம். பெண் சிசுக் கொலைக்கு பொருளாதார பிரச்சினை மற்றும் கலாசார சம்பிரதாய சடங்குகள்தான் முக்கிய காரணம். தொண்டு நிறுவனம் சார்பில் காப்பாற்றப்பட்ட பெண் குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு கல்விக்கடன் வட்டியில்லாமல் வழங்கப்பட்டு, உயர்கல்வி பெற்று நல்ல வேலைகளுக்கு சென்றுள்ளனர். ஆணும் பெண்ணும் சமம் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.

புள்ளநேரி சம்பவத்தில், தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பான இந்த சம்பவம் நிகழ்ந்த அதே வேளையில் உசிலம்பட்டி அருகே பிறந்த 18 நாட்களில் ஒரு பெண் குழந்தை உயிரிழந்தது. அதுவும் கொலை செய்யப்பட்டதா என்று சந்தேகம் எழுந்தது.

வாலாந்தூர் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் பெற்றோரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதில் அந்தக்குழந்தை மூச்சு திணறலினால்இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண் குழந்தையின் உடலை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story