தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
தென்காசி காசி விஸ்வதநாத சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
தென்காசி,
தென்காசி காசி விஸ்வதநாத சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கொடியேற்றம்
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 28–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், மண்டகப்படி தீபாராதனை, சுவாமி–அம்பாள் வீதிஉலா ஆகியவை நடைபெற்று வருகின்றன. மாலையில் சமய சொற்பொழிவும், அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
தேரோட்டம்
9–ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5.45 மணிக்கு சுவாமி– அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. அதன் பிறகு காலை 8.45 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பஞ்ச வாத்தியம் இசைக்க திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 9.15 மணிக்கு நிலையத்தை அடைந்தது.
பின்னர் 9.45 மணிக்கு உலகம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 10.40 மணிக்கு நிலையத்தை அடைந்தது. நிலையத்தை அடைந்ததும் பக்தர்கள் உற்சாக மிகுதியில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.
தீர்த்தவாரி
10–ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி, 11 மணிக்கு அபிஷேக தீபாராதனை ஆகியவை நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், கோவில் ஆய்வாளர் கலாமணி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story