அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் கூடங்குளம் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் இன்பதுரை எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் கூடங்குளம் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் இன்பதுரை எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 March 2020 3:45 AM IST (Updated: 7 March 2020 7:50 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் அந்த பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இன்பதுரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

கூடங்குளம், 

கூடங்குளம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் அந்த பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இன்பதுரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

மகளிர் கலைக்கல்லூரி 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுமின் நிலைய திட்ட இயக்குனர் சஞ்சய்குமாரை, இன்பதுரை எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:–

செட்டிகுளம் –கூடங்குளம் பகுதியில் மகளிர் கலைக்கல்லூரி அமைய கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் அமைய தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அணைக்கரை பகுதியில் இருந்து நம்பியாற்று தண்ணீரை பம்பிங் மூலம் கொண்டு வந்து கூடங்குளம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

கூடங்குளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நிலத்தடி நீரை உறிஞ்சி அணுமின் நிலைய கட்டுமானம் மற்றும் சுய தேவைகளுக்கு பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பு 

கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். அணுமின் நிலைய வேலைகளுக்கு செல்லும் உள்ளூர் பணியாளர்களுக்கு ‘அனுமதி பாஸ்’ வழங்குவதில் கடைபிடிக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக திட்ட இயக்குனர் சஞ்சய்குமார் உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பின்போது ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா மற்றும் அணுமின் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story