போலி ஆபாச வீடியோ தயாரித்து வினய் குருஜியிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் ‘யூ-டியூப்’ சேனல் உரிமையாளர் உள்பட 5 பேர் கைது


போலி ஆபாச வீடியோ தயாரித்து   வினய் குருஜியிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்   ‘யூ-டியூப்’ சேனல் உரிமையாளர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 8 March 2020 3:30 AM IST (Updated: 8 March 2020 12:23 AM IST)
t-max-icont-min-icon

போலி ஆபாச வீடியோ தயாரித்து வினய் குருஜியிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக யூ-டியூப் சேனல் உரிமையாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு, 

பெங்களூரு உத்தரஹள்ளி, சிக்கமகளூரு மாவட்டத்தில் ஆசிரமங்கள் நடத்தி வருபவர் வினய் குருஜி. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர்கள், நீங்கள் பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் எங்களிடம் இருக்கிறது, அதனை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். மேலும் பணம் கொடுக்காவிட்டால் அந்த வீடியோவை வெளியிடுவதாகவும் மர்மநபர்கள் மிரட்டல் விடுத்திருந்தனர்.

அதன்பிறகு, வினய் குருஜியிடம் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலமாக பேசிய மர்மநபர்கள் ரூ.30 லட்சம் கொடுத்தால் போதும், இல்லையெனில் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று கூறியும் மிரட்டல் விடுத்திருந்தனர். இதுதொடர்பாக வினய் குருஜியின் உதவியாளர் பிரசாந்த் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

5 பேர் கைது

மேலும் பணம் கேட்டு மிரட்டிய மர்மநபர்களை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வினய் குருஜிக்கு மிரட்டல் விடுத்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் கெங்கேரி உபநகர் அருகே ஏ.பி.எஸ். லே-அவுட்டை சேர்ந்த முனிராஜ் (வயது 61), பனசங்கரி 3-வது ஸ்டேஜை சேர்ந்த ரவிக்குமார்(48), ஆந்திரஹள்ளியை சேர்ந்த முரளி(34), மனோஜ்குமார்(24), மஞ்சுநாத்(40) என்று தெரிந்தது.

இவர்களில் முனிராஜ், யூ-டியூப்பில் ஹாவேரி என்ற சேனல் நடத்தி வருவதுடன், அதன் உரிமையாளராகவும் இருந்து வருகிறார். அவர் தன்னுடன் வேலை பார்க்கும் மற்ற 4 பேருடன் சேர்ந்து வினய் குருஜியுடன் பெண் இருப்பது போன்று ஆபாசமாக புகைப்படங்களை இணைத்து, போலி வீடியோ தயாரித்து பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் இந்த சம்பவத்தில் முனிராஜ் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story