எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ பட்டம் திருவாரூரில் நடந்த பாராட்டு விழாவில் வழங்கப்பட்டது


எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ பட்டம் திருவாரூரில் நடந்த பாராட்டு விழாவில் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 8 March 2020 6:00 AM IST (Updated: 8 March 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் நடந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

திருவாரூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு

தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா திருவாரூர் வன்மீகபுரத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருட்கள், விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி ரங்கநாதன் தலைமை தாங்கினார்.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவின் ஆசியுடன் விவசாயிகளை பாதுகாக்கக்கூடிய சட்ட முன்வடிவை முதல்-அமைச்சராக நான் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ததற்கு பெருமை அடைகிறேன். ஒரு விவசாயியான நான் முதல்-அமைச்சராக இருந்து விவசாயிகளின் துயரங்களை அறிந்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மனநிறைவு

விவசாய பெருமக்களின் உணர்வுகள் இறைவனுக்கு தெரிந்து இருக்கும் என நினைக்கிறேன். அந்த இறைவனே ஜெயலலிதா வடிவில் வந்து ஆசி வழங்கி முதன் முதலாக சட்டமன்றத்தில் இந்த சட்டமுன்வடிவை தாக்கல் செய்ய வைத்துள்ளார். இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை இந்த சட்டமுன்வடிவம். தொழிலதிபர்கள் கோடி, கோடியாக பணம் சம்பாதிக்கலாம். ஆனால் மன நிறைவு கிடைக்காது.

மன நிறைவோடு வாழக்கூடிய பாக்கியத்தை இறைவன் விவசாயி ஒருவனுக்குத்தான் வழங்கி இருக்கிறார். விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். எவ்வளவு செல்வம் இருந்தாலும் செல்வத்தை பார்த்து கொண்டு தான் இருக்க முடியும். உணவை மட்டும் தான் உண்ண முடியும்.

வருண பகவான்

விவசாயி யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. வருண பகவானுக்கு மட்டும்தான் பயப்பட வேண்டும். ஏனென்றால் உரிய காலத்தில் மழை பெய்தால்தான் நாம் விவசாய பணிகளை செய்ய முடியும். எனவே பெருமைக்குரிய விவசாயிகளை முகமலர்ச்சியுடன் காணும்போது பெருமகிழ்ச்சி அடைகின்றேன். விவசாயியாகிய நான், முதல்-அமைச்சராக இருந்தாலும் இங்கே உள்ளே அத்தனை பேரையும் முதல்-அமைச்சராகத்தான் பார்க்கிறேன். உங்கள் மனதில் என்ன உணர்வு உள்ளதோ அதே உணர்வு எனக்கும் இருக்கிறது.

முதல்-அமைச்சர் பதவி வரும், போகும். ஆனால் உணர்வு என்பது எப்போதும் உள்ளத்தில் இருக்கும். எனக்கு முன்பு பேசியவர்கள் கூறும்போது ஆளுபவர்கள், உழவர்களாக இருக்க வேண்டும் அல்லது உழவு பற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். அது உண்மைதான். 65 சதவீதம் விவசாயிகள் நிறைந்த பூமி தமிழ்நாடு. விவசாயம் பற்றி தெரிந்தவர்கள் தமிழகத்தை ஆண்டால்தான் அவர்களது பிரச்சினைகளை தீர்க்க முடியும். உழவுத்தொழில் என்பது கடினமானது. யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் களத்தில் இறங்கி வேலை பார்த்தால்தான் தெரியும்.

வழக்குகள்

விவசாயிகளின் நிலையை உயர்த்த வேண்டும். அவர்களுக்கு இரட்டிப்பு வருமானத்தை வழங்க வேண்டும் என்பதற்காக எனது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. எந்தெந்த வகையில் விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்க முடியுமோ அதையெல்லாம் திட்டமாக தீட்டி செயல் வடிவம் கொடுத்து வருகிறோம். விவசாய பணிகள் முழுவதையும் நான் கற்றுக்கொண்ட காரணத்தினால் தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டாவை அறிவித்து சட்டமுன்வடிவை கொண்டு வந்தேன்.

இங்கே மேடையில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் அனைவரும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடும் என்பதற்காக ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக உரிமைக்குரல் கொடுத்து கொண்டிருந்தோம். அந்த காலக்கட்டத்தில் போலீசார் பல்வேறு வழக்குகளை எங்கள் மீது பதிவு செய்தனர்.

உரிய நடவடிக்கை

இந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வழக்குகளை திரும்பப்பெறுவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும். சட்டம் என்பது பொதுவானது. சட்டத்தின் அடிப்படையில் அந்த காலக்கட்டத்தில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இன்றைய தினம் அது முடிவுக்கு வந்துவிட்டது. உங்கள் கோரிக்கை அரசின் பரிசீலினையில் உள்ளது. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சந்தேகம் கிளப்புகிறார்கள்

பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலம் குறித்து இன்னும் சிலர் சந்தேகத்தை எழுப்புகிறார்கள். அண்மையில் கூட தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. ஒருவர், நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பினார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதாவை கொண்டு வர மத்திய அரசுக்கு தான் உரிமை இருக்கிறது. எப்படி மாநில அரசு இதை நிறைவேற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினார். விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதைப்போல இந்த சட்டம் கொண்டு வந்தது சிலருக்கு பிடிக்கவில்லை.

சட்டம் நிறைவேற்றப்பட்டதும் பிடிக்கவில்லை. அதனால் தான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள். இதை விவசாயிகள் தெரிந்து கொண்டால் போதும். யார் விவசாயிகள் பக்கம் உள்ளார்கள் என்பதை நீங்கள் உணர்வு பூர்வமாக தெரிந்து கொள்ளுங்கள். இன்றைக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டு உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் தி.மு.க.வினர் சந்தேகம் கிளப்புகிறார்கள் என்று சொன்னால் அவர்கள் எப்படி கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அச்சம் வேண்டாம்

மத்திய சுற்றுச்சூழல் மந்திரி, மாநில அரசுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என தெளிவாக சொல்லி விட்டார். டெல்டா பகுதி விவசாயிகள் இனி அச்சப்பட தேவையில்லை. எந்த காலத்திற்கும் இந்த சட்டம் உங்களுக்கு துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘காவிரி காப்பாளன்’ பட்டம்

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளன்’ என்ற பட்டம் விவசாய சங்க பிரதிநிதிகள் சார்பில் வழங்கப்பட்டது. சட்டப்பூர்வமாக ஒருவரின் நலத்திற்கு பொறுப்பு ஏற்பவர் காப்பாளன். காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நலன் ஏற்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் சட்டம் கொண்டு வந்ததால் ‘காவிரி காப்பாளன்’ விருது வழங்குவதாக காவிரி ரங்கநாதன் கூறினார். மேலும் முதல்-அமைச்சருக்கு வெள்ளியால் ஆன ஏர் கலப்பை, வாள், நெல்லினால் ஆன கோபுரம், நெல் மாலை ஆகியவை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, எம்.பி.க்கள் ஆர்.வைத்திலிங்கம், ஏ.நவநீதகிரு‌‌ஷ்ணன் சிவி.சேகர் எம்.எல்.ஏ. நன்னிலம் ஒன்றிய குழு தலைவர் விஜயலெட்சுமி துணைதலைவர் அன்பழகன், கூட்டுறவு சங்க தலைவர் ராம குண சேகரன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட தலைவர் பயரி.சு.கிரு‌‌ஷ்ணமணி, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்க மாநிலத் தலைவர் காவிரி.வே.தனபால், தமிழக விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆர்.சுகுமாரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ்.தனபதி, காவிரி விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி பி.ரவீந்திரன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி மு.ராஜேந்திரன், தமிழக விவசாய விவசாயிகள் நலச்சங்க தலைவர் க.சேதுராமன், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் தலைவர் இரா.பாண்டுரங்கன், நெடுவாசல் கிராம கூட்டமைப்புத் தலைவர் சி.வேலு, உழவர் குழுக்களின் ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவர் டாக்டர் கோபால் ஆகியோரும் முதல்- அமைச்சரை பாராட்டி பேசினர்

முன்னதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வரவேற்றார். முடிவில் காவிரி டெல்டா விவசாயிகள் குழும பொதுச்செயலாளர் சத்தியநாராயணன் நன்றி கூறினார்.


Next Story