தந்தையை இழந்து வறுமையிலும் சாதனை படைத்து வரும் பெரம்பலூர் விளையாட்டு வீராங்கனை


தந்தையை இழந்து வறுமையிலும் சாதனை படைத்து வரும் பெரம்பலூர் விளையாட்டு வீராங்கனை
x
தினத்தந்தி 7 March 2020 10:30 PM GMT (Updated: 7 March 2020 7:48 PM GMT)

தந்தையை இழந்து வறுமையிலும் தேசிய அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு வீராங்கனை சாதனை படைத்துள்ளார். அவர் தேசிய அளவில் மொத்தம் 2 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் பெரம்பலூர் மாவட்ட மகளிர் விளையாட்டு விடுதியில் தங்கி, பெரம்பலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 (வணிகவியல்) படித்து வருபவர் பிரியதர்ஷினி(வயது 17). இவர் கரூர் மாவட்டம், தோகைமலை தாலுகா, நாட்டார் கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான வீரப்பன்-வளர்மதி தம்பதியின் மகள் ஆவார்.

தமிழ்நாட்டிற்காக பிரியதர்ஷினி கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் ஆந்திரா மாநிலம் குண்டூரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் ஆந்திரா மாநிலம் திருப்பதியிலும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கங்களை பெற்றார். 2019-20-ம் கல்வியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடகம் மாநிலம் உடுப்பியில் நடந்த தேசிய அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் பிரியதர்ஷினி மீண்டும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கும், பெரம்பலூர் மாவட்டத்திற்கும், அவர் பிறந்த மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தங்கப்பதக்கங்களை குவித்துள்ளார்

மேலும் பிரியதர்ஷினி மாவட்ட, மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டிகளிலும் தங்க பதக்கங்களை பெற்று குவித்துள்ளார். கடந்த மாதம் நெல்லையில் இளையோர்களுக்கான மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியிலும் பிரியதர்ஷினி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை மாணவி பிரியதர்ஷினிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன், விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் சக மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவருக்கு ஏராளமான வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

சிறந்து விளங்கியதால்...

தங்கப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த பிரியதர்ஷினி இது குறித்து கூறியதாவது:-

எனக்கு சிறுவயதில் இருந்து விளையாட்டின் மீது அதிகம் ஆர்வம் இருந்தது. ஆனால் அதற்கு தனியாக பயிற்சி பெற, குடும்பத்தில் பண வசதி இல்லை என்பதால் 7-ம் வகுப்பு முடித்த பின்னர் பெரம்பலூரில் உள்ள மாணவிகளுக்கான விளையாட்டு விடுதியில் சேர்ந்தேன். நான் தடகள போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் சிறந்து விளங்கியதால், அந்த போட்டிக்கு பயிற்சி பெற்று வருகிறேன். அதற்கு முன்னாள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்பிரமணிய ராஜா, தற்போதைய அதிகாரி பாபு, விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயக்குமாரி, தடகள பயிற்சியாளர் கோகிலா ஆகியோர் என் மீது தனிக்கவனம் செலுத்தி பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

6 பெண் குழந்தைகள்

எனது வீட்டில் என்னுடன் சேர்த்து மொத்தம் 6 பெண் குழந்தைகள் உள்ளனர். பெற்றோருக்கு நான் 2-வது மகள் ஆவேன். என்கூட பிறந்தவர்கள் ஒரு அக்கா, 4 தங்கைகள் ஆவார்கள். கடைசி தங்கைக்கு 4 வயது தான் ஆகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் நடந்த சாலை விபத்தில் எனது தந்தையே இழந்தேன். தற்போது எங்களை எனது தாய் விவசாய கூலி வேலைக்கு சென்று தான் படிக்க வைத்து வருகிறார். தந்தையே இழந்த நாங்கள் வறுமையில் தான் இருக்கிறோம். அதற்காக சோர்வடையாமல், மீண்டும் விளையாட்டில் அதிகம் கவனம் செலுத்தினேன். இதனால் தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற முடிந்தது. நான் சர்வதேச அளவிலும், ஒலிம்பிக்கிலும் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்க தொடர்ந்து முயற்சி எடுப்பேன். தற்போது என்னை மேற்படிப்பு படிக்க வைப்பதற்கு எனது தாய் கஷ்டப்பட்டு வருகிறார். என்னை அவர் கல்லூரி படிக்க வைப்பார் களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தந்தையை இழந்து வறுமையிலும் சாதனை படைத்து வரும் இந்த வீராங்கனையின் மேற்படிப்பு மற்றும் பயிற்சிக்கு உலக மகளிர் தினமான இன்றைய தினத்தில் இருந்து தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் உதவ முன்வர வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Next Story