டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2020 3:30 AM IST (Updated: 8 March 2020 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலை எடப்பாளையம் கூட்ரோடு அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த கடையின் முன்பு நடைபெற்ற தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து கலெக்டர் கந்தசாமி உத்தரவின்பேரில் அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் அந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் அருண், செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுபற்றி அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 12 மணி அளவில் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர்.

பொதுமக்களின் போராட்டத்தினால் ஊழியர்கள் கடையை திறக்காமல் சென்றனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘இந்த கடையை இங்கு திறக்கக்கூடாது. மீறி கடையை திறந்தால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

Next Story