டி.நரசிப்புரா அருகே பரபரப்பு தூக்கில் தொங்கிய நிலையில் மடாதிபதி பிணம் மீட்பு தற்கொலையா? போலீஸ் தீவிர விசாரணை


டி.நரசிப்புரா அருகே பரபரப்பு   தூக்கில் தொங்கிய நிலையில் மடாதிபதி பிணம் மீட்பு   தற்கொலையா? போலீஸ் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 8 March 2020 4:30 AM IST (Updated: 8 March 2020 1:58 AM IST)
t-max-icont-min-icon

டி.நரசிப்புரா அருகே தூக்கில் தொங்கிய நிலையில் மடாதிபதி பிணம் மீட்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்தாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மைசூரு, 

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா பெனகானஹள்ளி கிராமத்தில் பட்டத்து மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக மகாதேவசாமி (வயது 47) இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது மடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து மடத்தின் ஊழியர்களும், பக்தர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் டி.நரசிப்புரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர்.

சாவில் மர்மம் இருப்பதாக பக்தர்கள் புகார்

பின்னர், மகாதேவசாமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக டி.நரசிப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே மடாதிபதி மகாதேவசாமியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், எனவே உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படியும் பக்தர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனால் மகாதேவசாமி தற்கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மடாதிபதி மகாதேவசாமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

பரபரப்பு

அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பக்தர்கள் புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மடாதிபதி எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்றனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story